இந்த நிலையில், தமிழ் மக்கள் கையொப்பமிட்ட பதின் மூன்று அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை முன் நகர்த்திச் செல்ல சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.ஆ.ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
பொதுவேட்பாளர் தெரிவு முயற்சி கைகூடாத நிலையிலும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட ஆவணத்தைச் சிங்களக் கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் நிராகரித்துள்ள நிலையிலும் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்துக் கேட்டபோதே ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு இவ்வாறு விளக்கமளித்தார்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பது அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற இந்த இரண்டு தெரிவுகள்தான் தமிழ் மக்கள் முன்னிலையில் இருப்பதாகக் கூறிய அவர், பகிஸ்கரிப்பு இயக்கத்திற்கு மக்களை உடனடியாக மாற்றுவது கடினமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேற்குலகத்துடனான உரையாடல் ஈழத் தமிழர்களுக்கு மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது சாத்தியப்படக் கூடியதல்ல என்றும் ஜோதிலிங்கம் விபரித்தார்.
கூர்மைச் செய்தித் தளத்திற்கு ஜோதிலிங்கம் வழங்கிய சிறப்பு நேர்காணலின் முழு விபரம் வருமாறு
ஐந்து கட்சிகளினுடைய பதின்மூன்று அம்சங்கள் அடங்கிய ஆவணம் என்பது ஐந்து கட்சிகளினுடைய ஆவணம் என்று கூறுவதை விட ஆறு கட்சிகளின் ஆவணம் என்று குறிப்பிடலாம். ஏனெனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த ஆவணத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் ஏற்றிருந்தது. புதிய அரசியல் யாப்புக்கான வரைபை நிராகரிக்க வேண்டும் என்ற விடயத்தை மாத்திரம் உள்ளடக்க முடியாத நிலையில், முன்னணி ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.
அதேவேளை, அந்த ஆவணத்தை மக்களும் ஏற்றுள்ளனர். ஆகவே அந்த ஆவணத்தின் வழி வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
இந்த ஆவணத்தை இரண்டு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் நிராகரித்துள்ளனர். அவ்வாறு நிராகரித்த நிலையில் இந்த ஆவணத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முதலாவது இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பை மாற்றமாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்களுக்கான நிரந்த அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணிப்பறிப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்குச் சர்வதேச நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்த அரசியலைச் செய்ய வேண்டிய அவசியம்.
இரண்டாவது, ஆவணத்தை இரு வேட்பாளர்களும் நிராகரித்துள்ள நிலையில் அவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியாது. ஆணையை வழங்கவும் முடியாது. எனவே அந்த இடத்தில் தமிழ் மக்களுக்குரிய தெரிவு இரண்டுதான். ஒன்று, தேர்தலைப் பகிஸ்கரித்தல் அல்லது சிவாஜிலிங்கத்தை ஆதரித்தல்.
ஆனால் பகிஸ்கரிப்புக்கான போராட்டத்தை நடத்துவதில் இரண்டு வகையான பிரச்சினைகள் உண்டு. ஒன்று தேர்ல் பகிஸ்கரிப்பு என்பது மேற்குலக உரையாடல்களுக்குப் பொருத்தமானதல்ல. இன்று இலங்கை சர்வதேச நிகழ்ச்சி நிரலோடு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குலகத்துடனான உரையாடல் என்பது எங்களுக்கு மிகவும் அவசியம்.
ஆகவே அதைவிட்டு நாங்கள் சர்வதேச அரசியலை நகர்த்துவதில் கடினத் தன்மைகளை சந்திக்க நேரிடும். ஆகவே இதன் காரணத்தினால் பகிஸ்கரிப்பை நாங்கள் ஏற்க முடியாது.
இரண்டாவது ஏற்கனவே வாக்களித்துப் பழகிய மக்களைப் பகிஸ்கரிப்பு இயக்கத்துக்கு மாற்றுவது கடினமானது. அதற்காக நீண்ட விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனால் அதற்கான சூழலோ, காலமோ இன்று இல்லை.
இந்த இரண்டு காரணங்களுக்காக பகிஸ்கரிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதென்று நான் நினைக்கிறேன். ஆகவே எங்களுக்குள்ள ஒரேயொரு தெரிவு தமிழ் வேட்பாளராகவுள்ள சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதுதான். சிவாஜிலிங்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு குறியீடுதான்.
அவரை ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாட்டை, அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட இந்த பதின்மூன்று அம்சத் திட்டத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பது பற்றி யோசிப்பதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி- பொதுவேட்பாளர் என்று சொன்னால் அதற்குரிய பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எவ்வாறு செய்யப் போகின்றீர்கள்?
பதில்- மக்கள் மத்தியில் அதைக் கொண்டு செல்வதற்குப் பொது அமைப்புகளோடு உரையாடல் நடத்துவது அவசியமானது. இதனைத் தமிழ் அரசியல் கட்சிகள் எந்தளவு தூரம் ஏற்றுக் கொள்ளும் என்று தற்போதைக்குக் கூற முடியாது. விரும்பினால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி போன்ற சில கட்சிகள் மட்டும் வரலாம். ஏனைய கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பது இன்னொரு விடயம். அரசியல் கட்சிகளினுடைய நிலைமை ஒருபக்கம் இருக்கப் பொது அமைப்புகளைச் சந்தித்து அவர்கள் ஊடாக ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி அதன் ஊடாக ஒரு அரசியல் பிரச்சாரத்தைக் கொண்டுபோவதுதான் ஆரோக்கியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
தற்போது அந்த வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே தொடங்கியுள்ளன. அதனை ஒழுங்குபடுத்தி அப்படி முன்கொண்டு செல்வதுதான் எங்களுக்கு முன் உள்ள பெரிய சவாலாக இருக்குமென நான் நினைக்கிறேன்.



