தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் திருகோணமலை-

கன்னியா விவகாரம்- பிக்குகளின் பின்னணியில் தமிழ் இராவணசேனையுமா?

மறுக்கிறார் செந்தூரன்- சிவன் மடப் பணியில் இருந்து அகத்தியர் அடிகளார் வெளியேற்றப்பட்டாரா?
பதிப்பு: 2019 ஜூலை 16 23:22
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 22:35
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அனுமதியோடு, தமிழ் பேசும் கிழக்குத் தாயகத்தின் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தை உடைத்துப் புத்த தாதுக் கோபுரம் கட்டும் நடவடிக்கைக்குப் பின்னணியில் நரேந்திர மோடியின் இந்துத்துவா அமைப்பின் கொள்கைகளை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் புதிய தமிழ் அமைப்பான இராவணசேனையும் செயற்படுவதாக திருகோணமலை மக்கள் பலா் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இராவணசேனை அமைப்பின் தலைமைச் செயலாளர் கு. செந்தூரனை கூர்மைச் செய்தித் தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராவணசேனை அமைப்புக்கும் இந்துத்துவாவுக்கும் எதுவிதமான தொடர்புகளும் இல்லையென்று கூறினார்.
 
இராவண சேனை என்ற அமைப்பு தமிழ் மக்களின் பண்பாடு, கலை கலாச்சாரங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதென்றும் செந்தூரன் கூறினார்.

கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் உள்ள சிவன் மடம் சீரற்ற நிலையில் காணப்பட்டதால் அதனை தனது அமைப்பு பொறுப்பேற்று நிர்வகிப்பதாகவும் செந்தூரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

ஆனால் சிவன் மடத்தை சிவன் ஆலயமாக மாற்றும் முயற்சி இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் இருந்த சிவன் மட நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள இராவணசேனை அமைப்பின் உறுப்பினர்கள், கன்னியாவில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் புத்த தாதுக் கோபுரத்தை அமைக்கும் பௌத்த பிக்குமாரின் திட்டம் தொடர்பாக அமைதியாக இருப்பதாகவும் மக்கள் பலர் குற்றம் சுமத்துகின்றனர்.

சிங்கள பௌத்த பிக்குமாரோடு இணைந்து செயற்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்பட முடியாதெனவும் செந்தூரன் கூறுகின்றார். பிக்குமாரின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தமிழர்களிடம் எந்தவிதமான அதிகாரங்களும் இல்லையென்றும் அவர் வாதிட்டார்.

இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதிக்குப் பின்னர் சிவன் மட நிர்வாகப் பணிகளில் இருந்து தான் விலகி்க் கொண்டதாக தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் பௌத்த- இந்து உறவுகளை உருவாக்கி, அதன் மூலம் இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுக்க இராவணசேனை போன்ற அமைப்புகள் செயற்படுகின்றன. இதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஒத்துழைப்பும் இருப்பதாக கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதனை மறுக்கிறார் செந்தூரன்

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையும் சிவன் மட நிர்வாகத்தை அகத்தியர் அடிகளாரே மேற்கொண்டு வந்திருந்தார். அதன் பின்னர் இராவணசேனை என்ற அமைப்பு அந்த மடத்தைப் பொறுப்பேற்று நிர்வகித்து வருவதாக கன்னியாப் பிரதேசத் தகவல்கள் கூறுகின்றன.

சிவன் மட நிர்வாகத்தில் இருந்து அகத்தியர் அடிகளார் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதாகவே திருகோணமலைப் பிரதேச வாசிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இதன் பின்னரான சூழலிலேயே கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் புத்த தாதுக் கோபுரத்தைக் கட்டுவதற்கு திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இதனை மறுத்துள்ள செந்தூரன், சிவன் மட நிர்வாக விடயத்தில் அகத்தியர் அடிகளார் பங்குகொள்ள மறுப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், சில வேளைகளில் இராவணசேனை அமைப்பு செயற்படுவதால் அடிகளார் வர மறுக்கலாமெனவும் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறினார்.

தென்கயிலை
நரேந்திர மோடியின் இந்துத்துவாக் கொள்கைகளைத் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வரும் இராவணசேனை அமைப்பு கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தை பௌத்த- இந்துத்துவா உறவின் மூலமாக மீட்க முடியும் என்ற தொனியிலும், இந்துவா அமைப்பின் செயற்பாடுகளைக் கண்டிக்கும் ஈழத் தமிழர்களை, சண்டியர்கள் எனவும் குறிப்பிடுகின்றது. இதன் பின்னணியிலேயே, திருகோணமலை தென்கயிலை ஆதீனக் குருமுதல்வர் அகத்தியர் அடிகளார் சிவன் மட நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாரெனக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பு கல்முனை வடக்குத் தமிழ்ப் பிரதேசச் செயலகத்தை தரமுயர்த்தும் நோக்கில் மக்களால் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்கூட இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுத்து வரும் உறுப்பினர்கள் சிலர் சிங்கள பௌத்த குருமாரை வலிந்து ஈடுபடுத்தியிருந்ததாகவே பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை, புத்த தாதுக் கோபுரம் அமைக்கவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் திட்டத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பற்றியிருந்தனர். அந்த மக்களுடன் இணைந்து இராவணசேனை அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போன்று செயற்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை எச்சரித்ததாகவும் பிரதேசவாசிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறினர்.

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் உள்ள சிவன் மடத்தை சிவன் ஆலயமாக மாற்றவும் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதற்கு திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர ஆதரவு கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது

திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதி, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அதிகளவிலான மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இலங்கைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

சிங்களப் பிரதேசங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளம் குண்டர்களும் இலங்கைப் பொலிஸாருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தியிருந்தனர். அந்தச் சிங்களக் குண்டர்கள் கத்திகள், வாள்களோடு நின்றதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அனுமதியோடு, கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை உடைத்துப் புத்த தாதுக் கோபுரம் கட்டும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், தென்கயிலை ஆதீன முதல்வருக்கு எதிராகப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் இராவணசேன அமைப்பின் உறுப்பினர்கள் தென்கயிலை ஆதீன குருமுதல்வர் அகத்தியர் அடிகளாருக்கு எதிராகப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அந்த அமைப்பு பிரச்சாரங்களைச் செய்யவில்லை.

இந்துத்துவா அமைப்பின் கொள்கைகளை முன்னெடுத்து வரும் இராவணசேனை அமைப்பு, தென்கயிலை ஆதீனத்துக்கு எதிராகச் செயற்படுகின்றமை தொடர்பாகக் கண்டனங்களும் எழுந்துள்ளன.

வட இந்திய வழிபாட்டு முறையைக் கொண்ட லக்ஷ்மி நாராயணன் கோவில், திருகோணமலை நிலாவெளிப் பிரதேசத்தில் 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தக் கோவில் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழாமில்லை. இந்த வழிபாட்டு முறை தமிழ்ப் பண்பாட்டுக் காலாச்சாரத்தைக் கொண்டதா என்ற சந்தேகங்களும் உண்டு

இதேவேளை, செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்கயிலை ஆதீன சுவாமிகள் அகத்தியர் அடிகளாரின் முகத்தில் சிங்களவர் ஒருவர் சுடுநீர் ஊற்றியமை கூட எதிர்ப்பு நடவடிக்கையை நிறுத்தும் முயற்சியென பிரதேச மக்கள் கருதுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தென்கயிலை ஆதீனம் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள சைவ ஆலயங்களை சிங்கள பௌத்த மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்துள்ளது.

இது தமிழ் இன அழிப்பு என்றும் ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சுடுநீர் ஊற்றிய சம்பவம் தொடர்பாக இலங்கைப் பொலிஸாரிடம் அகத்தியர் அடிகளார் முறையிட்டுள்ளார்.

கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் செயற்படும் இராவணசேனை என்ற அமைப்பு, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்துத்துவா அமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்படுவதாகக் கூறப்படுவது காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடென்று செந்தூரன் தெரிவிக்கிறார்.

ஆனால் இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தோடு இராவணசேனை அமைப்புக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

வட இந்திய வழிபாட்டு முறையைக் கொண்ட லக்ஷ்மி நாராயணன் கோவில் திருகோணமலை நிலாவெளிப் பிரதேசத்தில் 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இந்தக் கோயில் எந்த அடிப்படையில், கட்டப்பட்டது என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழாமலில்லை. இந்த வழிபாட்டு முறை தமிழ்ப் பண்பாட்டுக் காலாச்சாரத்தைக் கொண்டதா என்ற சந்தேகங்களும் உண்டு.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வட இந்திய வழிபாட்டு முறைகளைக் கொண்ட இந்துக் கோயில்கள், வடக்குக் கிழக்கு சைவத் தமிழ்ப் பிரதேசங்களில் மும்மரமாகக் கட்டப்பட்டு வருகின்றன. அத்துடன் பெளத்த- இந்து உறவு எனக் கூறிக் கொள்ளும் மாநாடுகள், அமைப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன எ்ன்பதும் இங்கே அவதானிக்கப்பாலது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் சிங்கள இராவண சேன என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுத் தீவிர பௌத்த தேசியவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.