இலங்கை ஒற்றையாட்சி ஜனாதிபதித் தேர்தல்

சிங்கள வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோட்டாபய ராஜபக்ச

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சொற்பமான வாக்குகளையே பெற்றார்
பதிப்பு: 2019 நவ. 17 20:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 18 02:32
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 13 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளினால் வெற்றி பெற்று ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். இலங்கைத் தீவு முழுவதிலும் அறுபத்து ஒன்பது இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை கோட்டாபய ராஜபக்ச பெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்தி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐம்பத்து ஐந்து இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து 239 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளார். பெற்ற வாக்குகளில் கோட்டாபய ராஜபக்ச 52.25% சத வீதத்தையும் சஜித் பிரேமதாச 41.99% சத வீதத்தையும் பெற்றுள்ளனர்.
 
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நான்கு இலட்சத்துப் பதிணெண்ணாயிரத்து ,553 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.

தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். சுயேட்சையாகப் போட்டியிட்ட ம.க.சிவாஜிலிங்கம் பன்னிரெண்டாயிரத்து இருநூற்று 56 வாக்குகளைப் பெற்றார்.

பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் சஜித் பிரேமதாச கூடுதலான வாக்குகளைப் பெற்றார். கோட்டாபய ராஜபக்ச மிகவும் குறைந்தளவு வாக்குகளையே பெற்றார். ஆனால் சிங்களத் தேர்தல் தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ச அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

நாளை திங்கட்கிழமை அனுராதபுரத்தில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமே கலைக்க முடியும். இதனால் பெப்ரவரி மாதம் வரை தற்காலிக அமைச்சரவையொன்றை அமைப்பது குறித்து ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆலோசித்து வருகின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி வகிக்க அனுமதிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகின்றது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க தரப்பு விரும்பவில்லை என ஐக்கிய தேசிய் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியை ஆட்சி அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க அமெரிக்கா முற்படு்கின்றதா என்ற தலப்பில் கூர்மைச் செய்தித் தளம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன் இலங்கை தொடர்பான அமெரிக்க நகர்வுகள் குறித்தும் செய்திக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன.