வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில்

நீதி கேட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

சர்வதேச மனித உாிமைகள் தினத்தை முன்னிட்டு ஒன்றிணைந்து கோசம் எழுப்பிய மக்கள்
பதிப்பு: 2019 டிச. 10 16:06
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 12 21:03
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#humanrights
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர். கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தினர். கிளிநொச்சி. மட்டக்களப்பு, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
 
யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்;ப்பாட்டத்தின் பின்னர் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தமது பிள்ளைகள், கணவன்மார் தொடர்பாக இலங்கை அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் வடக்குக்- கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.

வெறுப்புப் பேச்சை எதிர்ப்போம் என்ற தொனிப் பொருளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற போராட்டத்தில், இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் வாக்குறுதிகளை இனிமேல் நம்பமுடியாதெனக் கூறப்பட்டது. தமிழ் இளைஞர், யுவதிகள் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பங்குகொண்டனர். மறுக்கப்பட்ட நீதி கிடைக்க வேண்டுமெனவும் காணாமல் ஆக்கபட்டோர் பற்றி இலங்கை அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டுமெனவும் போராட்டத்தில் பங்குபற்றிய மக்கள் கோசம் எழுப்பினர்.