வலுவேறாக்கம் இல்லாத-

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையும் ராஜபக்சக்களும்

ஈழத் தமிழர்களின் அரசியல்சார்ந்த விவகாரங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் சுயாதீனமற்ற தன்மை
பதிப்பு: 2020 மே 30 14:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 30 21:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரந்யாக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டமே நடத்தியிருந்தனர்- ஆனால் எதுவுமே நடக்கவில்லை. 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவரை பிரதம நீதியரசராகப் பதவி உயர்த்தியிருந்தார்.
 
ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சுக்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் உண்டு- இதனாலேயே, தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்வைத்து இலங்கை அரசாங்கத்தோடு அன்று பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன

ஆனால் 2014ஆம் ஆண்டு அவரைப் பலத்காரமாகப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார். 1999ஆம் ஆண்டு அவரது நியமனத்தை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி 2014இல் அவருக்காக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை நிறைவேற்றிப் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டத்திற்கு மாறானதென நிரூபித்தது.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்தை விட மீயுயர் அதிகாரம் கொண்டது எனச் சுட்டிக்காட்டி, மொகான் பீரிஸை பிரதம நீதியரசராக அவசர அவசரமாக நியமத்திருந்தார்.

மாகாண சபைகளின் நிதி அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலம் ஒன்று தொடர்பான சிறாணி பண்டாரநாயக்காவின் வியாக்கியானம் தன்னுடை நோக்கத்துக்கு மாறானது என்ற காரணத்தினாலேயே அவரைப் பதவி நீக்கி, மொகான் பீரிஸ் மூலமாக அந்தச் சட்ட மூலத்திற்குச் சார்பான வியாக்கியாணத்தை மகிந்த பெற்றிருந்தார்.

தற்போது கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி செயற்படுவேன் என்ற தொனியில் அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கிறார். எச்சரிக்கையும் விடுகிறார். இலங்கை அரசியல் யாப்பில் ஜனநாயகத்துக்கு முரணான சில சரத்துகள் இருப்பதாக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர்கள் பலர் ஏலவே கூறியிருக்கின்றனர்.

குறிப்பாக ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சுக்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் உண்டு- இதனாலேயே, தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்வைத்துப் புலிகள் இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுக்களை நடத்தியிருந்தனர். (தமிழ்த் தேசியம் என்பது தமிழ் ஈழம் அல்ல)

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த உறுப்பினர்களுக்குக் கூட அரசியல் யாப்பில் உள்ள முரண்பட்ட தன்மைகள், நீதித்துறையின் சுயாதீனம் அற்ற நிலைகள் குறித்து நன்றாகவே புரியும்--- ஆனால் ஆளும் கட்சியாக மாறும்போது அவை தங்களுக்கும் சாதகமாகத் தேவைப்படும் என்ற நோக்கில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏதோ ஜனநாயக மீட்பர்கள் போன்று கத்திவிட்டுப் பின்னர் அமைதியாகி விடுவர்.

தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனை மக்களிடம் தாராளமாகவே உண்டு. நாடாளுமன்றக் கலைப்பையடுத்து கோட்டாபய ராஜப்சவுக்கும் இலங்கை நீதித்துறைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார இழுபறியும் அதன் பின்னரான அரசியல் சூழலும் நிச்சயம், தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கொடுக்கலாம்

அதுவும் ஈழத் தமிழர் சார்ந்த விடயங்களில் நீதித்துறை மாறான தீர்ப்புகளை வழங்கும்போது மகிழ்ச்சியோடு அமைதியாக இருப்பார்கள். குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, கைதாகும் இராணுவத்தினர் பிணையில் விடுதலை செய்யப்படுதல், அல்லது பொது மன்னிப்பு வழங்கப்படுதல் போன்ற விடயங்களில் அமைதியாக இருப்பர். (அப்போது சிங்கள தேசம் என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்)

வேண்டுமானால் அந்தக் கட்சிகளில் அங்கம் விகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் சும்மா ஒப்பாசாரத்துக்காக ஆவேசமாகச் சத்திட்டு அறிக்கை விடுவர்- அதுவும் அரசியல் நாடகம் என்று சிங்களத் தலைவர்களுக்கும் புரியும். ஆகவே தமிழ்க் கட்சிகள் இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு சாதாரண கட்சி அரசியலில் ஈடுபடும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் இருதரப்புப் பேச்சுக்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான நிலையில் கடந்த ஒரு தசாப்பத காலத்தில் அதற்கான தற்துணிவு தமிழ்க் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாகத் தமிழரசுக் கட்சி 1950-60களில் வெளிக்காட்டிய தமது அரசியல் இயலாமைகளில் இருந்து பாடம் கற்காமல் முப்பது ஆண்டுகால போரின் பின்னரும் மீண்டும் அந்த இயலாமைகளையே தமது மிதவாத அரசியலாகவும் புதிய ஜனநாயகப் பண்பாகவும் கண்பித்து மற்றுமொரு அழிவை நோக்கிச் செல்கின்றதா என்ற கேள்விகளும் எழாமலில்லை.

தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனை மக்களிடம் தாராளமாகவே உண்டு. நாடாளுமன்றக் கலைப்பையடுத்து கோட்டாபய ராஜப்சவுக்கும் இலங்கை நீதித்துறைக்கும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார இழுபறியும் அதன் பின்னரான அரசியல் சூழலும் நிச்சயம், தமிழ் இளைஞர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கொடுக்கலாம்.

அது மாற்று அரசியல் தளத்திற்கான, ஜனநாயகக் கட்டமைப்பின் கீழான தேசிய இயக்கம் ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனையைத் தோற்றுவிக்கலாம்.