கொரோனா வைரஸ் தாக்கம்

பயணக் கட்டுப்பாடு- தமிழர் பிரதேசங்களும் முடங்கியது

இலங்கைத்தீவு முழுவதிலும் மக்கள் நடமாட்டம் இல்லை
பதிப்பு: 2021 மே 16 20:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 18 21:49
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கை அரசாங்கத்தினால் கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவியரீதியில் அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடை காரணமாக தமிழர் தாயகத்தின் வட மாகாணம் கடந்த இரண்டு நாட்களாக முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மேற்படி போக்குவரத்துத் தடை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய வட மாகாண மாவட்டங்கள் முற்றாக செயலிழந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் வாழும் பல லட்சம் தமிழ் பேசும் மக்கள் தமது வீடுகளில் முடங்கியுள்ளனர்.
 
இலங்கையின் 24 மாவட்டங்களிலும் கொவிட் -19 நோய் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை இலங்கை அரசாங்கம் நாடு தழுவியரீதியில் பயணத்தடையை அமுல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வழமையான வர்த்தக நடவடிக்கைகள், விவசாய செய்கைகள், கடற்றொழில் நடவடிக்கைகள், கைத்தொழில் முயற்சிகள் , போக்குவரத்து செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து மக்களின் நடமாட்டமின்றி முழு வட மாகாணமும் முடங்கியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் குறித்த பயணத்தடை காரணமாக அனைத்து வர்த்தக நிலையங்களும், வியாபார ஸ்தலங்களும், சந்தைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் யாழ் நகரின் உள்ள பல முக்கிய வீதிகள் மற்றும் ஏ-9 கண்டி நெடுஞ்சாலை ஆகியன மக்கள் நடமாட்டமோ வாகனப் போக்குவரத்துகளோ இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும் யாழ் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மற்றும் சாவகச்சேரி போன்ற மாவட்டத்தின் முக்கிய நகரிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பெரும் அளவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயணத்தடை அமுல் காரணமாக யாழ் மாவட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறாது முடங்கியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை கடந்த வெள்ளி அதிகாலை தொடக்கம் மக்கள் நடமாட்டமோ வாகனப் போக்குவரத்தோ இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் அனைத்துக் கடைகளும் அரசாங்கத்தின் பயணத்தடை காரணமாக மூடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பூநகரி மற்றும் முழங்காவில் போன்ற நகரங்களும் குறித்த பயணத் தடை காரணமாக முற்றாக ஸதம்பித்துள்ளதுடன் இப்பிரதேச மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாது தமது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதேவேளை அரசாங்கத்தின் பயணத்தடையினால் மன்னார் மாவட்டம் முற்றாக செயலிழந்துள்ளது. மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் நகரின் பல முக்கிய வீதிகள் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுவதுடன் குறித்த வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் நகரில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த வெள்ளி அதிகாலை தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்திய பயணத்தடை காரணமாக மன்னார் மாவட்டத்தின் முருங்கன், நானாட்டான், அடம்பன், பேசாலை ஆகிய முக்கிய நகரங்கள் வாகனப் போக்குவரத்தோ மக்கள் நடமாட்டமோ இன்றி முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் அப்பகுதி மக்களும் தொடர்ந்து வீடுகளிளேயே முடங்கியுள்ளனர்.

வவுனியா நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் மேற்படி பயணத்தடை காரணமாக மூடப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்துகளும் மக்கள் நடமாட்டமும் இல்லாததினால் வவுனியா நகரமே மயான அமைதியுடன் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வவுனியா நகரில் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இராணுவத்தினர் நகரில் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வவுனியா நகரை ஊடறுத்துச் செல்லும் யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 பிரதான நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து இன்மையினால் எவ்வித ஆரவாரமுமின்றி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதேவேளை வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, மாங்குளம் துணுக்காய், மல்லாவி ஆகிய முக்கிய நகரங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்படி நகரங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் கடந்த வெள்ளி காலை தொடக்கம் மூடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வெளியேறாது வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.