எரி காயங்களினால் சிறுமி உயிரிழந்த விவகாரம்

றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட மூவர் கைது

பொலிஸாரின் விசாரணையில் மேலும் பல பாலியல் துஷ்பிரயோகங்கள் அம்பலம்
பதிப்பு: 2021 ஜூலை 23 14:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 14:44
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிஷாத் பதியூதீனின் மனைவி உட்பட மூவர் வெள்ளிகிழமை அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் பணிபுரிந்த நுவரெலியா மாவட்டத்தின் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி இஷாலினி தீ காயங்களினால் மரணமடைந்தமை மற்றும் அச்சிறுமி மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பில் கொழும்பு பொரளைப் பொலிஸார் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொண்டுவரும் நிலையிலேயே றிஷாத் பதியூதீனின் மனைவி அவரின் சகோதரர் மற்றும் டயகம பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பு முகவர் ஆகிய மூவர் பொரளை பொலிஸாரினால் 23 ஆம் திகதி வெள்ளி அதிகாலை கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நுவரெலியா மாவட்டம் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஏழை தமிழ் சிறுமியான இஷாலினி ஜுட் குமார் வேலைவாய்ப்பு தரகரான சங்கர் என அழைக்கப்படும் 64 வயதான பொன்னையா பண்டாரம் என்பவர் மூலம் கடந்த வருடம் நவம்பர் 17 ஆம் திகதியன்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியூதீனின் கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் உள்ள இல்லத்தில் வீட்டு வேலைக்காக பணிக்கு அமர்த்தப்பட்டார். அச்சமயம் குறித்த சிறுமியான இஷாலினி ஜுட் குமாருக்கு வயது 15 என்று இலங்கைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் றிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய சிறுமி தான் அடிக்கடி தாக்கப்படுவதாகவும் குறித்த வீட்டில் தான் தொடர்ந்து பணியாற்ற முடியாதென தனது தாயாருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலே குறித்த சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தீ காயங்களினால் மரணமடைந்த இஷாலினிக்கு முன்னர், றிஷாட்டின் கொழும்பு இல்லத்தில் வீட்டுப்பணிக்காக ஏலவே இரண்டு இளம் பெண்கள் பணியாற்றிய தகவலை புலன் விசாரணையில் அறிந்து கொண்டனர்.

றிஷாத்தின் வீட்டில் பணிசெய்த குறித்த இரண்டு பெண்களும் மரணமடைந்த இஷாலினியின் ஊரான நுவரெலியா டயகமவினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் குறித்த இரு பெண்களும் மேற்படி வேலைவாய்ப்பு தரகரான பொன்னையா பண்டாரம் மூலமாகவே முன்னாள் அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் வீட்டுப்பணிக்காக அமர்த்தப்பட்டதாகவும் பொலிஸாரின் புலன் விசாரணையில் மேலும் தெரியவந்தது.

அத்துடன் குறித்த இரண்டு பெண்களில் ஒருவர் 32 வயது நிரம்பிய பத்மா எனும் பெயருடைய தரகர் பொன்னையாவின் மகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகமவில் உள்ள குறித்த இரண்டு பெண்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். இவ்வேளை குறித்த இருவரில் ஒருவரான 22 வயதுடைய பெண், தான் றிஷாத் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணியாற்றியவேளை அங்கு தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகப் பொலிஸாருக்கு அளித்த தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் றிஷாத் பதியூதீன் மனைவியின் சகோதரர் எனும் தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் பொரளை பொலிஸார் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீனின் மனைவி, அவரின் சகோதர் மற்றும் வேலைவாய்ப்பு முகவர் பொன்னையா பண்டாரம் ஆகியோரை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்