வடமாகாணத்தின் மன்னாரில் மீட்கப்பட்ட

மனித எச்சங்களை மரபணு பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை தாமதமாகுவதாக சட்டத்தரணிகள் விசனம்

இதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் சந்தேகம்
பதிப்பு: 2018 நவ. 19 22:16
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 20 17:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னாரில் திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகளை காபன் பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணி தாமதமாகுவதாக இலங்கை சட்டத்தரணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள எலும்புகளை வெளிநாட்டிற்கு ஆய்வுக்காக அனுப்புவதாயின் அதற்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் செல்லும் எனவும் அவர்கள் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
குறித்த இரண்டு புதைகுழிகளிலிருந்தும் இதுவரை நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பகுதிகளாகவும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட நீதிமன்றில் மீட்கப்பட்ட மனித புதைகுழிகள் இரண்டினதும் மீதான வழக்கு விசாரணைகள் நடைபெற்றவேளை இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை காபன் பரிசோதனை மற்றும் மரபணு பரிசோதனைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அனுப்புவது தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் இதுவரை குறித்த மனித எலும்புகளை ஆய்வுக்காக அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் குறித்த எலும்புகள் தொடர்பில் மன்னார் நீதிமன்றில் வழக்கை நடாத்தி வரும் இலங்கை பொலிஸாரும் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது.

அத்துடன் மன்னார் மாவட்ட நீதிமன்றில் குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பான இவ்விரு வழக்குகளை நடத்திவரும் இலங்கை பொலிஸார் நகர்த்தல் பிரேரணை ஒன்றினைத் தாக்கல் செய்தே மனித எலும்புகளை ஆய்வுக்காக வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான நீதிமன்ற கட்டளைகளை பெறுதல் வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

எனினும் இதுவரை மன்னார் நீதிமன்றத்தில் இவ்விதமான எந்த விண்ணப்பங்களும் இலங்கை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னாரிலுள்ள மனிதப் புதைகுழிகளிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புகளில் ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு உகந்த எலும்புகளின் பாகங்களை வகைப்படுத்துவதற்கு மானிடவியல் சார்ந்த மனித எலும்புகள் தொடர்பிலான அதித நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் உதவி தேவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித எலும்புகளின் முள்ளந்தண்டு எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகள், தொடை எலும்புகள் ஆகியவற்றை மட்டுமே காபன் பரிசோதனை மரபணு பரிசோதனை ஆகியவற்றிற்கு உட்படுத்துவதன் மூலம் வயது பால் மற்றும் மரணம் சம்பவித்த விதம் தொடர்பான துல்லியமான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புகளை ஆய்வுக்காக வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பும் நிலையில் அதனை பொதி செய்தல், மன்னாரிலிருந்து கொழும்பிற்கு எடுத்து செல்லுதல், எலும்பு பொதிகளை விமானத்தில் ஏற்றும் வரை அதனை கொழும்பில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துதல் மற்றும் இதற்கான அனைத்து செலவுகளையும் நிதியொதுக்கீடுகளையும் எவ்விதம் மேற்கொள்வது, எந்த அமைச்சின் மூலமாக இதற்கான நிதியை விடுவிப்பது என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் நலன் தொடர்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

அத்துடன் மனித எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு வெளிநாட்டிற்கு அனுப்புவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தாம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.