பிரபல பாடசாலையான

வவுனியா - விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானத்தைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

அரசியல்வாதிகள் உட்பட இலங்கை ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியும் எவ்வித பயனுமில்லை என விசனம்
பதிப்பு: 2019 ஜன. 22 21:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 22 21:56
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#VipulanandaCollege
#Protest
#Ground
வவுனியா விபுலானந்தாக் கல்லூரிக்கு நிரந்தர மைதானத்தைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, பாடசாலைக்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான விபுலானந்தாக் கல்லூரிக்கு மைதானமொன்றை வழங்குமாறு கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்த போதும், இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில், இன்றைய தினம் பண்டாரிகுளம் வீதியை மறித்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
 
இதற்கு ஆதரவாக பாடசாலை மாணவர்கள், பாடசாலையின் உட்புறத்தில் பதாதைகளை ஏந்தியவாறு தமது ஆதரவை தெரிவித்திருந்ததாக கூர்மையின் வவுனியா செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விபுலானந்தாக் கல்லூரிக்கென விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் பல கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று விளையாட்டுக் கழகங்களினதும், வவுனியா நகரசபையினதும் விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் சோர்வடைந்து வீதிகளிலேயே மயக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்கார்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

மைதானமொன்றைப் பெற்றுத்தருமாறு அரசியல்வாதிகள் உட்பட இலங்கை ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பிய போதிலும், இதுவரை எவ்வித பலனும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமது பாடசாலைக்குப் பின்புறமாக உள்ள காணியைப் பெறுவதற்கு நிதியுதவி செய்து காணியைப் பெறுவதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமக்கு நிதி அன்பளிப்பு வழங்கி தேசிய மட்டத்தில் சாதனை படைத்து வரும் தமது மாணவர்களுக்கு மைதானத்தைப் பெற உதவ வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்ததாக வவுனியா செய்தியாளர் தெரிவித்தார்.