இலங்கை அரசாங்கத்தினால் நிகழ்தப்பட்ட இன அழிப்பு போர்

சர்வதேச விசாரணை மூலம் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஆரம்பம்
பதிப்பு: 2019 பெப். 17 11:03
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 17 11:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#RelationsofMissingPerson
#Geneva
#Mullaituvu
தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் நிறைவின் பின்னரும் அதற்கு முற்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்றனவற்றுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் 40 ஆவது ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன்போது சமர்ப்பிப்பதற்காக வடக்கு, கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒரு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின், முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை கையெழுத்துப் பெறும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை கையெழுத்துப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஷ்வரி கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக வீதியோரங்களில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தறப்பாள் கொட்டகைகளில் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும்,

இன அழிப்புப் போரை நிகழ்த்திய இலங்கை அரசாங்கம் உட்பட அதற்குத் துணைபுரிந்த நாடுகளும் இந்த விடயத்தில் மௌனம் காத்துவருவதுடன், பததிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் இழுத்தடிப்பைச் செய்துவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட தமிழ் மக்களது நீதிக்காக போராடும் ஒரு சில அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் யுத்தக் குற்ற விசாரணை விடயத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், உரிய முறையில் சர்வதேசம் விசாரணை மேற்கொண்டு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.