இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களம்

கோட்டாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்குச் சட்டச் சிக்கலை ஏற்படுத்த மைத்திரி முயற்சி

ராஜபக்ச குடும்பத்தைவிட சந்திரிக்காவை மையப்படுத்திய கூட்டை உருவாக்க விரும்பும் ஜே.வி.பி.
பதிப்பு: 2019 ஏப். 13 22:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 22:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக மூத்த உறுப்பினர்களிடையே பணிப்போர் நீடிக்கின்றது. இந்த நிலையில் தென்னிலங்கையில் அடுத்த அரசியல் சக்தியாகவுள்ள ஜே.வி.பி இந்த மூன்று கட்சிகளின் செயற்பாடுகளையும் கண்டித்து விமர்சித்து வருகின்றது.
 
தீவிர மாக்சியக் கட்சியாகவும் இடதுசாரியாகவும் தன்னை காட்டிக்கொள்ளும் ஜே.வி.பி, ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டும் வருகின்றது. இதனால் ஜே.வி.பியையம் சிங்கள பேரினவாதக் கட்சியாகவே தமிழ்த் தரப்பு நோக்குகின்றது.

பிரதான மூன்று அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குழப்பங்கள் குறித்து ஜே.வி.பி தற்போது வரைக்கும் பார்வையாளராகவே உள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவருடைய சகோதரர்களும் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்படுவதைவிட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனுமே மோதுகின்றனர்.

இவ்வாறான நிலையில், மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதிக்கம் செலுத்த முடியாதென்கிறார் கட்சியின் மூத்த உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கா.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னமும் விலகவில்லை என்கிறார் மஹிந்த ராஜபக்ச. தங்காலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, அரசாங்கத்தின் செயற்பாடுகளினாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நியமிக்க முடியாதென மஹிந்த ராஜபக்ச இதவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் வேறு ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படுவார் அதுவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்ததான் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாகவே ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருப்பதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசணைப்படி செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது என்ற சட்டச் சிக்கலை மேலும் அதிகரித்து, அதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க ஆலேசித்து வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியாதென்ற சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் மறைமுகமாக ரணில் அரசாங்கத்துடன், மைத்திாிபால சிறிசேன சேர்ந்து செயற்படுவதாகக் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதில் ஜே.வி.பியும் அக்கறையுடன் இருப்பதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் கூட்டில் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதை ஜே.வி.பி வரும்புவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் சந்திரிக்கா தலைமையிலான கூட்டுக்கும் ஜே.வி.பி. சாதகமான முடிவைக் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.