தமிழர் தாயகத்தில் தொடரும் சோதனை நடவடிக்கை முல்லைத்தீவு-

வற்றாப்பளை பொங்கல் திருவிழாவுக்குச் சென்றோர் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது

இலங்கைப் பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கையே இதுவென உறவினர்கள் விசனம்
பதிப்பு: 2019 மே 21 11:15
புதுப்பிப்பு: மே 21 11:50
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கைப் பொலிஸாரின் சோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கைக்குண்டு வைத்திருந்ததாக தெரிவித்து நேற்றுத் திங்கட்கிழமை இரவு வற்றாப்பளை அம்மன் ஆலய திருவிழாவிற்கு சென்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் இருந்து ஆலயத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்களே பளை பொலிஸாரால் இலங்கைப் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் அதிகளவான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் திருவிழாவுக்காக சென்றவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கும் பயணிகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், குறித்த வாகனத்தைப் பரிசோதிப்பதாகத் தெரிவித்து பொலிஸார் வானில் குண்டை வைத்துவிட்டு பின்னர் வானிலிருந்து குண்டை மீட்பது போன்று வானில் பயணித்தோர் மீது குற்றம்சுமத்தியுள்ளதாக குடும்பத்தினர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

திட்டமிட்ட வகையில் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களது வல்வெட்டித்துறையில் உள்ள வீடுகளும் சுற்றிவளைத்து சோதனையிடப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் அவர்களோடு இணைந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போன்று மீண்டும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மறைமுகமாக ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.