உணர்வுத் தளத்தோடு முடங்கிவிடாமல், தர்க்கீக அடிப்படையில்

நினைவுத் திறத்தை நிலைநாட்ட ஈழத் தமிழர்களுக்கு வினைத்திறன் தேவை

தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யவேண்டியது என்ன?
பதிப்பு: 2020 நவ. 29 20:26
புதுப்பிப்பு: டிச. 02 19:40
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மாவீரர் நாளைப் பகிரங்கக் கூட்டு நினைவெழுச்சியாக இல்லாது மாற்றிவிடவேண்டும் என்று இலங்கை ஒற்றையாட்சி அரசு கங்கணம் கட்டி நிற்கிறது. நினைவேந்தலை நீர்த்துப்போகச்செய்யும் இந்தச் செயற்பாட்டில் உலக, பிராந்திய வல்லாதிக்கங்களும் இணைந்துள்ளன. பல தரப்புகளால் பல அடுக்குகளில் நகர்த்தப்படும் இந்த நகர்வுகளை ஈழத்தமிழர்கள் உணர்வுரீதியான முனைப்புகளூடாக மட்டும் முறியடித்துவிடமுடியாது. தர்க்கீக அடிப்படையில் நினைவுத்திறத்தை (memorialisation) முன்னெடுக்கவேண்டும். இதைச் செய்வதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்தப் பொறுப்பை மாவீரர் நினைவு நாளில் இவர்கள் சரிவரச்செய்திருக்கிறார்களா என்பதை உணர்வுத் தளத்துக்கு அப்பால் அறிவுரீதியாக ஆராயவேண்டியிருக்கிறது.
 
நினைவேந்தலை நீர்த்துப்போகச்செய்யும் செயற்பாட்டில் உலக, பிராந்திய வல்லாதிக்கங்களும் இயைந்துள்ளன. பல தரப்புகளால் பல அடுக்குகளில் நகர்த்தப்படும் இந்த நகர்வுகளை ஈழத்தமிழர்கள் உணர்வுரீதியான முனைப்புகளூடாக மட்டும் முறியடித்துவிடமுடியாது. தர்க்கீக அடிப்படையில் நினைவுத்திறத்தை (memorialisation) முன்னெடுக்கவேண்டும்

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கை ஒற்றை ஆட்சி அரசும் அதன் முப்படைகளும் காவற்துறையும் தீவில் நிலவும் அரசியற் சூழலுக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் விதம் விதமாகத் தடங்கல்களை ஏற்படுத்துவது வழமை. இந்த ஆண்டு, குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் தருணத்தில், இந்த நிலைமை மேலும் வீரியமுற்றுள்ளது.

கடந்த நவம்பரில், கோட்டாபய தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பத்து அம்சக் கொள்கை ஒன்றைப் பிரகடனம் செய்திருந்தார்.

அதில் முதலாவதாகத் "தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை" என்றும் பத்தாவதாக "சட்டத்தை மதிக்கக் கூடிய ஒழுக்க நெறியுடைய குணநலம் கொண்ட சமூகத்தை உருவாக்குதல்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஈழத்தமிழர்களைத் தனது சிங்களப் பெரும்பான்மைக் காவற்துறையூடாகவும் முப்படைகளூடாகவும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டங்களை மதிப்பவர்களாக "ஒழுக்கப்படுத்தல்" (disciplining) என்பதும் அதன் உட்கிடக்கை.

மாவீரர் நாள் கூட்டுநிகழ்வுகள் தடுக்கப்பட்ட பாணியை ஆராய்கிற போது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் பதவிக்கு வந்தபோது சொன்ன மேற்குறித்த விடயத்தையே இந்த ஆண்டு கோட்டாபய நிறுவ எத்தனித்திருப்பது ஐயத்துக்கிடமின்றிப் புலனாகிறது.

1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டக் கோவை (PTA), பொலிஸ் சட்டக் கோவை (Police Ordinance), 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டத்தின் (ICCPR Act) பிரிவுகள் போன்றவற்றையும் ஒன்றுடன் ஒன்று தொடுத்து தனது "ஒழுக்கப்படுத்தலை" அவர் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

ஈழத்தமிழர்கள் தமது வீரர்களுக்கான கூட்டு நினைவேந்தலை பகிரங்க நிகழ்வுகளாக முன்னெடுக்கக்கூடாது என்பது ராஜபக்ஷ சகோதரர்களின் நிலைப்பாடாக அவர்களின் முன்னைய ஆட்சியிலும் காணப்பட்ட ஒன்றே. எனினும் இவ்வருடம் சில வித்தியாசங்கள் தென்படுகின்றன. அரசியற் சட்டங்களை அதீதமாகப் பயன்படுத்துவது என்பது அதில் ஒன்றாக இருக்கிறது. குறியீடுகள் மீதான தடையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாவீரர் நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கண்காணிப்புகளை 20ம் திகதியிலிருந்து 29ம் திகதிவரையான 9 நாட்களாக இலங்கை அரசின் காவற்துறையும் படைத்தரப்பும் தீவிரப்படுத்தியிருந்தன.

இதை எந்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு எதிர்கொண்டிருக்க வேண்டும் என்பதே இங்கு எழுகின்ற கூர்மையான கேள்வி.

நடைமுறையில் நடந்தேறியவற்றைப் பார்க்கும் போது தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தும் கோட்டபாயவின் "ஒழுக்கப்படுத்தலுக்கு" பலியாகியிருப்பது புலனாகிறது.

முதலில் இலங்கை அரசின் பொலீஸ் தரப்பு விரிவான தடையுத்தரவுகளை நீதிமன்றங்களூடாக முன்னெடுத்தது.

இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் நீதித்துறையிடம் அரசியற் செயற்பாட்டில் இருக்கும் வழக்கறிஞர்கள் சிலர் மனுக்களைத் தாக்கல் செய்து வாதிட்டனர். ஆனால், தீர்ப்பு கோட்டபாயவின் கொள்கைப் பிரகடனத்தின் முதலாவது அம்சமான தேசியபாதுகாப்பு என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது

இதை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் நீதித்துறையிடம் அரசியற் செயற்பாட்டில் இருக்கும் வழக்கறிஞர்கள் சிலர் மனுக்களைத் தாக்கல் செய்து வாதிட்டனர். ஆனால், தீர்ப்பு கோட்டபாயவின் கொள்கைப் பிரகடனத்தின் முதலாவது அம்சமான தேசியபாதுகாப்பு என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

விளைவாக, மூடிய கட்டட அறைகளுக்குள்ளும், வளவுகளுக்குள்ளும் பகிரங்கமற்ற பிரத்தியேகமான "தனியார்" (private) நினைவேந்தலை நடாத்தி முடித்ததன் ஊடாக மேற்குறித்த "ஒழுக்கப்படுத்தலுக்கு" உட்பட்டவர்களாகவே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிற் பலர் தம்மை நடைமுறையிற் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைச் செய்வதற்கே தாங்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டதாக அவர்கள் வாதிடலாம். இந்த வாதம் உணர்வின் பாற்பட்டது மட்டுமே.

கட்சி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, மக்களாணை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக, ஒருமித்த கூட்டாக, ஓரிடத்தில் நின்று, கூட்டு மாவீரர் நினைவேந்தலை சிறிதாகவேனும் இவர்கள் நடாத்தியிருந்தால் "தனியார்" நினைவேந்தலை மட்டும் அனுமதிப்பது என்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டத்தைப் பயன்படுத்தும் "ஒழுக்கப்படுத்தலுக்கு" உள்ளாகாத தன்மையை, தமக்குரிய பாராளுமன்றச் சிறப்புரிமையையும் பயன்படுத்தி, வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யத் தவறியதன் மூலம் கோட்டபாயவின் ஒழுக்கப்படுத்தலுக்கு இவர்களே இடமளித்துவிட்டார்கள்.

நோய்த்தடுப்பு கருதி பங்குபற்றுவோரின் தொகை, இடைவெளி, மற்றும் சிறப்பு ஒழுங்குகள் பற்றிய கட்டுப்பாடுகளை பகிரங்கநிகழ்வுகளுக்கு விதிப்பது கூட ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. ஆனால், முற்றுமுழுதாக கூட்டு நினைவேந்தலை தனது "தேசிய பாதுகாப்பு" என்ற காரணத்தையும் சமவாயச் சட்டத்தையும் காட்டி ஒரு தேசத்துக்கு அல்லது மக்கள் கூட்டத்துக்கு மறுப்பதென்பது கொழும்பின் அரசியல் இராணுவ முடிவாகவே பார்க்கப்படவேண்டியது.

இதற்குத் தக்க அரசியற் போராட்டப் பதிலடியைக் கொடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் அனைத்துக் கட்சிகளும் இம்முறை தவறியுள்ளன.

வெறுமனே யுத்தத்தில் இறந்து போனவர்களை நினைவு கூரும் நிகழ்வாக, அதுவும் தனியார் வெளியில் மட்டுமே நினைவேந்தல் செய்யப்பட முடியும் என்று இலங்கை அரசு முன்வைக்கும் கட்டளையைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களே ஏற்றுகொள்கிறார்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை பகிரங்க, கூட்டு நிகழ்வுகள் ஊடாகப் பொதுவெளியில் நினைவுகூருவது என்பது அவர்களின் சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டது.

இதற்கு இலங்கை ஒற்றை ஆட்சி அரசிடமோ அல்லது அதன் நீதித்துறையிடமோ அனுமதிகோருவது என்பது ஈழத்தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கு இலங்கை அரசிடம் அனுமதி கோருவதற்கு ஒப்பானது.

இந்தவகையில், பகிரங்க நினைவுகூரல் நிகழ்வுகளை முன்னெடுக்கவிடாது முற்றிலும் தடுக்கப்பட்டிருப்பதை ஈழத்தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருக்கும் கொழும்பு அரசின் அடிப்படை உரிமை மறுப்பாக மட்டுமல்ல, தொடரும் இன அழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகவும் ஈழத்தமிழர்களின் அரசியல் தரப்புகள் அணுகவேண்டும்.

சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்திற்கு அப்பாற்றப்பட்ட ஈழத் தமிழர் தேசத்தின் உரிமை. சர்வதேசச் சட்டமரபில் இதை இணைபிரிக்கப்பட முடியாத (inalienable right) ஓர் உரிமை என்று கூறுவார்கள். இதை இயற்கைச் சட்டம் என்றும் பிறப்புரிமை என்றும் கூட அழைக்கலாம். அதாவது, எந்த ஓர் அரசுடைய சட்டவாக்கத்தாலும் மறுக்கப்படமுடியாத ஓர் உரிமை.

ஜனநாயக விழுமியத்தோடு சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைச் செய்ய முன்வருமாறு இளந்தலைமுறைக்கு அனைத்துத் தமிழ் அரசியற்கட்சிகளும் இணைந்து ஒரு வேண்டுகோளை 1976 இல் விடுத்தன. இந்த வேண்டுகோளில் அளப்பரிய அர்ப்பணிப்புகளுக்கூடாகவும் போராடத் தயாராய் இருக்கவேண்டும் என்று அப்போதைய தமிழ் இளைய தலைமுறையினருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. குறித்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான தமிழ் மக்களின் மக்களாணை ஜனநாயகரீதியாக 1977 பொதுத்தேர்தலில் தந்தை செல்வா தலைமையில் வெளிப்பட்டது.

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு முன்னதாக தற்போதே ஒரு வருட கால வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அறிவுத்தளத்தில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவது அவசியம். கட்சி வேறுபாடற்ற மாவீரர் நினைவேந்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படுவது இதற்கான முதற்படி

தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுக்கான கூட்டு நினைவேந்தல் நாட்களான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் மாவீரர் நாளும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையோடு பின்னிப் பிணைந்தவை என்பதற்கான நியாயப்பாட்டைக் காலந்தவறாமல், இனிமேலாவது பகிரங்கமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தெளிவாக முன்வைக்க இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும். இந்தச் செய்தியை இவர்கள் சொல்லவேண்டியது இலங்கை அரசுக்கும் சிங்கள தேசத்துக்கும் மட்டுமல்ல, மிக முக்கியமாக சர்வதேசத் தரப்புகளுக்கே.

மாவீரர் நினைவேந்தலைத் தடுப்பதற்குத் தனது ஆறாம் சட்டத்திருத்தத்தை நேரடியாகக் காரணம் காட்டாது இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும், சமவாயச் சட்டத்தையுமே தற்போது காரணம் காட்டிவருவதை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

அதாவது, பயங்கரவாதம் என்ற தனது வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் உலகின் பல நாடுகளில் சட்டம் சார்ந்த தடைகள் இருக்கின்ற "அரசியல் வெளியை" இலங்கை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. முதற்கட்டமாக குறித்த நாடுகள், அவற்றின் தூதராலயங்கள் ஊடாகத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களால் அணுகப்படவேண்டும்.

அதேவேளை, நினைவுத்திறம் குறித்த அகலமான பார்வையும் செயற்திட்டங்களும் வகுக்கப்படவேண்டும்.

அடுத்த மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு முன்னதாக தற்போதே ஒரு வருட கால வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அறிவுத்தளத்தில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவது அவசியம். கட்சி வேறுபாடற்ற மாவீரர் நினைவேந்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படுவது இதற்கான முதற்படி.