சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பும் உள்ளடங்கலாக

இன அழிப்பை உள்ளடக்கி சர்வதேசப் பொறுப்புக்கூறலை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோருகின்றன

ஆனாலும் சொல்லாடலைக் கையாள்வதில் தமிழ்த்தேசிய நீக்கச் சக்திகள் தீவிர முனைப்பு
பதிப்பு: 2021 ஜன. 16 11:17
புதுப்பிப்பு: ஜன. 19 15:48
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நீண்ட இழுபறிக்கும் பலத்த அழுத்தங்களுக்கும் மத்தியில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் மூன்று தேர்தற் கட்சி அணிகளும் ஒருங்கிணைந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக் குற்றம், போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்களை ஐ.நா.வின் உச்சபட்சப் பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைப் பொறிமுறைகளுக்குள் விரைந்து செலுத்துமாறு ஒரு கூட்டு வேண்டுகோளை சனிக்கிழமையன்று விடுத்துள்ளன. இன அழிப்புக்கான சர்வதேச நீதியை வேண்டிநிற்கும் கோரிக்கையில் சம்பந்தனும் கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் இணைந்து கையொப்பமிட்டுள்ளமை ஒரு முக்கிய மைல்கல்லாக நோக்கப்படும் அளவுக்கு இந்தக் கூட்டு முயற்சிக்குப் பின்னால் ஆழமான தமிழ்த்தேசியச் சக்திகள் பல முனைகளில் இருந்தும் தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டுள்ளன.
 
"தேர்தல் அரசியற் கனவான்களையும் சிவில் சமூக சொல்லாடல் நாயகர்களையும் கசக்கிப் பிழிந்து எடுக்கப்பட்ட வரைபு இது," என்று இந்த நகர்வில் ஈடுபட்டிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத செயற்பாட்டாளர் ஒருவர் கூர்மை இணையத்தளத்துக்குத் தனது கருத்தை வெளியிட்டார்.

தமது கோரிக்கையில் தமிழர்கள் எதை முன்வைக்க வேண்டும், எதை முன்வைக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் கூட காலனித்துவ காலத்தில் செலுத்திய அதே தாக்கத்தைப் பிரித்தானியா ஈழத்தமிழர்கள் மீது செலுத்துவதும் அதற்கு மிக இலகுவாக அடிமைகளாகும் ஆபத்து எம்மவரிடையே இருக்கும் செயற்பாட்டாளர்கள் சிந்தனையாளர்கள் மத்தியில் இருப்பதையும் காணமுடிகிறது

மூலக் கோரிக்கையின் வீச்சை மழுங்கடிக்கச் செய்வதிலும் வரைபின் சொற்பிரயோகங்களுக்குள் புகுந்து விளையாடி முடக்கச் செய்வதிலும் மேற்குலக வல்லாதிக்கங்களின் நிதியூட்டத்தில் செயற்படும் தமிழ் "அறிவுழைப்பினர்" தமது ஏகாதிபத்திய அடிவருடலை நிலைநாட்ட நூதனமாக இயங்கியுள்ளதும் கோரிக்கைகளின் ஆங்கிலச் சொல்லாடலில் வெளிப்படுகிறது.

இன அழிப்பு விசாரணையையும் (inquiry) அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையையும் (mechanism) பிரதானமாகக் கோரவேண்டும் என்ற சிந்தனை இந்தக் கட்சிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் நான்கு அம்சக் கோரிக்கையில் ஓரளவு காத்திரமாக வெளிப்பட்டிருக்கிறது வரவேற்கப்படவேண்டியது. இது குறித்து பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருந்தன.

எனினும், அரசியற் தீர்வு என்ற மிக முக்கியமான நீதி ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவது சரியான முறையில் வெளிப்படவில்லை.

பொறுப்புக்கூறல் என்ற "சுப்பரின் கொல்லைக்குள்ளேயே" தமிழர்களின் கோரிக்கையும் "சுற்றிச்சுற்றி" நிற்கவேண்டும் என்ற சிந்தனை இந்த வரைபைத் தயாரித்தோரின் பிரதான குறைபாடாகிறது.

நடந்து முடிந்த போரை மட்டுமே பிரதான முரண்பாடாகவும் (armed ethnic conflict), தேசிய முரண்பாடு தொடர்கிறது, போர் மட்டுமே இன அழிப்பூடாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கருத்து வலியுறுத்தப்படாமலும் வரைபின் அறிமுகம் அமைந்துள்ளது.

அடிப்படை முரண்பாடு (conflict) தொடர்பான நிலைமாற்றம் (transition) வராமல் நிலைமாறுகால நீதிக்கான (transitional justice) வாய்ப்பே இல்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தவறியிருப்பது கவலைக்குரியது. (நிலைமாறுகால நீதியின் நிதியில் திளைத்திருப்பவர்களால் எவ்வாறு அதற்கு மாறாக வரைபைத் தயாரிக்கமுடியும் என்ற கேள்வி இங்கு எழுவது நியாயமானதே!)

ஈழத்தமிழர் தேசம் மீதான கட்டமைக்கப்பட்ட இலங்கை அரசின் இன அழிப்பு வேலைத்திட்டத்தின் தார்ப்பரியம் வீச்சாக எடுத்துச் சொல்லப்படாமல் எங்கோ ஓர் இடத்தில் மட்டும் வேகத்துடன் தொடரப்படுகின்ற தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை (continuing and intensifying oppression against the Tamils) என்று விபரிக்கப்படுகிறது.

பொறுப்புக்கூறலுக்குரிய அடுத்தகட்ட நடவடிக்கையைக் கோரும் முதலாவது கோரிக்கையில் இன அழிப்பு என்பதற்கான நீதியைக் கோரும் போது, வேறு பொருத்தமான நடவடிக்கை எடுக்கவும் என்று கோருவது (and any other appropriate and effective international accountability mechanisms to inquire into the crime of genocide, war crimes and crimes against humanity) ஒருவகையில் நீர்த்துப்போகச் செய்யும் போக்காக இருக்கிறது.

தேசம், இறைமை, ஈழத்தமிழ் என்ற அடையாளம், பொதுவாக்கெடுப்பு எல்லாம் தேர்தல் விஞ்ஞாபனத்தோடு, அதுவும் தமிழ் மொழியில் மட்டும், நின்றுவிடுகின்றன. ஆனால், ஆங்கிலத்தில் ஐ. நா. நோக்கி கோரிக்கை முன்வைக்கப்படும் போது இவையெல்லாம் காற்றில் பறந்துவிடுகின்றன.

எனினும், இன அழிப்புக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் (international accountability mechanisms to inquire into the crime of genocide) கோருகிறார்கள் என்பதிலும், அனைத்துக் குற்றங்களுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையையும் (IIIM) கோருகிறார்கள் என்பதிலும் ஒன்றிணைந்து முதன்முறையாக தமிழ் ஆணையை வழங்கியிருக்கிறார்கள் என்ற வகையில் இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் (ஏகாதிபத்திய அடிவருடிகள் உள்ளடங்கலாக) பாராட்டப்படவேண்டியவர்களே.

கூட்டுக் கோரிக்கையின் உள்ளடக்கம் எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பொதுவெளியில் வைத்துத் தீர்மானிப்பதில் கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்பதிலும், அக் கோரிக்கைகள் எவ்வாறு அமைவது பொருத்தம் என்பதையும் பல தமிழ்த்தேசிய அறிவுத்தளச் சக்திகள் அடிமட்டத்தில் இருந்து வலியுறுத்தியும் செயற்பட்டும் வந்தன.

சிவகரன் தலைமையிலான தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமும் தமிழ்த் தேசிய நலனில் அக்கறை கொண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் இணைவு நடவடிக்கைக்கான கூட்ட நகர்வுகளை ஒரு தளத்தில் முன்னெடுத்தனர்.

அதேவேளை, இன்னொரு தளத்தில் மேற்குலக நிதியூட்டலில் இயங்கும் தன்னார்வச் சக்திகள் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நீர்த்துப்போகும் வகையில் வரைபைத் தயாரிக்கச் செய்வதில் தமது கைங்கரியத்தை இரண்டு முனைகளில் நிலைநாட்ட முனைந்தன.

முரண்பாடு (conflict) தொடர்பான நிலைமாற்றம் (transition) வராமல் நிலைமாறுகால நீதிக்கான (transitional justice) வாய்ப்பே இல்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தவறியிருப்பது கவலைக்குரியது. நிலைமாறுகால நீதியின் நிதியில் திளைத்திருப்பவர்களால் எவ்வாறு அதற்கு மாறாக வரைபைத் தயாரிக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது

கொழும்பில் இருந்து இயங்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு அப்பால் நிலைமாறுகால நீதிக்கான நிதியூட்டத்தில் திளைத்தவாறு தமிழ்த் தேசியச் சக்திகளாகத் தம்மை அடையாளப் படுத்திவரும் தமிழ் சிவில் சமூக அறிவுழைப்பினர் சிலரும் இதில் உள்ளடக்கம்.

கட்சிகளின் மோதல் வெளியே தெரிந்தது. பின்னால் இருந்து மோதிய சக்திகளும் அச்சக்திகள் பயன்படுத்திய முகங்களும் முழுமையாகத் தம்மை வெளிப்படுத்தவில்லை.

தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட பல தரப்புகளுடனும் தொடர்பில் இருந்ததோடு மட்டுமன்றி அவ்வப்போது கையளிக்கப்பட்டுவந்த மாற்றங்களை இயன்றவரை பார்வையிடக்கூடிய ஓர் ஊடகமாகவும் கூர்மை இணையம் இருந்ததென்ற வகையில் இறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஒப்பீட்டளவில் ஒரு வெற்றிப்படியாகக் கொண்டாலும், இதிலே பல படிப்பினைகளும் ஊடகத்துறையினருக்குக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

தமிழ்த்தேசியம் பேசுவதில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டிருக்கும் எந்தத் தமிழ்த்தேசியக் கட்சியும் "புனிதத்துவத்துக்குரியது" அல்ல என்பதே முதலாவது படிப்பினை.

தமிழ்த்தேசிய நிலைப்பாடு சார்ந்து முன்னர் முரண்பட்டிருந்த சில ஆளுமைகள் ஒன்றாகக் கோரிக்கை நீக்கத்தில் இணைந்து கொண்டிருந்ததையும், ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இயங்கியதையும், கூடிக் கதைப்பது யார், கையெழுத்திடுவது யார், அதுவும் எந்த ஒழுங்கில் என்பதான விடயங்களில் எழுந்த சர்ச்சைகள், கூட்டங்களில் நடந்துகொண்ட "அவை அடக்கம்" தொடர்பான விடயங்கள் போன்றவற்றில் கண்டுகொள்ளமுடிந்தது.

இன அழிப்புக்கான சர்வதேச நீதியைக் கோருவதில் இருக்கவேண்டிய கவனக் குவிப்பு எதிர்பார்ப்புக்கு மாறாக நீர்த்துப்போயிருந்தது. அதேவேளை, அடிமட்டத்தில் இருந்து பலர் இந்தக் கவனக்குவிப்பை வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

எனினும், தேசம், சுயநிர்ணயம், தமிழ் இறைமை, பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கை மற்றும் ஈழத்தமிழ் அடையாளம் போன்ற விடயங்களில் அக்கறை அருகிப்போயிருந்தது.

ஒற்றைக் கோரிக்கையை மாத்திரம் முன்வைக்கவேண்டும், அல்லது குறித்த ஒன்றை மாத்திரம் எதிர்க்கவேண்டும் என்பதில் முழுச் சக்தியையும் செலவிட்ட தரப்புகளையும், வழமைக்கு மாறாக சந்தேகத்துக்குரியவகையில் அமைதியாகவும் பொறுமையாகவும் செயற்பட்ட தரப்புகளையும், அதேவேளை தற்போது அரசியற் பதவி எதையும் வகிக்காதவர்கள் கொள்கையைக் கைவிடாது இறுக்கமாக நின்ற தன்மைகளையும் தெளிவாகக் காணமுடிந்தது.

2009 இற்குப் பின்னர் ஈழத் தமிழர்களிடையே முனைப்புக் காட்டும் தேர்தல் அரசியல் தமிழ்த் தேசியத்தை மீண்டும் ஒரு முறை மென்று தின்று விட்டது என்றே சொல்லலாம்.

தேர்தல் அரசியல் ஈழத்தமிழர்களுக்குத் தலைமை தாங்க வக்கற்றது. ஈழத்தமிழர்களால் அரசியற் கட்சிகள் அடிமட்டத்தில் இருந்தே ஆட்டுவிக்கப்பட்டும் நிலை உருவாகவேண்டும் என்பது மீண்டும் ஒரு பட்டறிவாகிறது.

மேலிருந்து கீழாக அன்றி, கீழிருந்து மேலாக கட்சிகளும், அவற்றின் அணிகளும் செயற்படும் நிலைக்கு மாற்றப்படவேண்டும்.

அடுத்ததாக, தமிழர் தரப்பை மேற்குலக வல்லாதிக்க நலன்களுக்கு ஏற்பக் கையாளுவதற்கான தலைமைப் பொறுப்பை தற்போதும் பிரித்தானியாவே வகித்துவருகிறது எனற படிப்பினை.

புலம்பெயர் அமைப்புகள் மீதும் தாயகத்தில் செயற்படக்கூடிய ஆங்கிலம் தெரிந்த தமிழ் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் பிரித்தானியா அதிக தாக்கம் செலுத்துகிறது.

ஆங்கில மொழிக்குச் சமாந்தரமாகத் தமிழ் மொழியில் கோரிக்கையை வடிவமைத்து வெளிப்படைத்தன்மையுடன் விவாதிக்கும் போக்கு இல்லாமல், ஆங்கிலம் தெரிந்த ஒரு சில ஏகாதிபத்திய அடிவருடிக் கனவான்களிடம் வரைபுக்கான மொழிக் கையாளுகையை "அவுட்சோர்ஸ்" பண்ணுவது ஆபத்தானது என்பதைப் பலரும் புரிந்திருக்கவில்லை

தமது கோரிக்கையில் தமிழர்கள் எதை முன்வைக்க வேண்டும், எதை முன்வைக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் கூட காலனித்துவ காலத்தில் செலுத்திய அதே தாக்கத்தைப் பிரித்தானியா ஈழத்தமிழர்கள் மீது செலுத்துவதும் அதற்கு மிக இலகுவாக அடிமைகளாகும் ஆபத்து எம்மவரிடையே இருக்கும் செயற்பாட்டாளர்கள் சிந்தனையாளர்கள் மத்தியில் இருப்பதையும் காணமுடிகிறது.

கனடாவும் ஜேர்மனியும் பிரித்தானியாவின் போக்குக்கு ஒத்தாசை புரியும் நாடுகளாகவே இருக்கின்றன.

ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் கனடா ஊடாக மேற்குலகத்தை தமது நலனுக்குத் தக்கவாறு ஆட்டுவிக்கும் அரசியலைத் தமிழர்கள் முன்னெடுப்பதா அல்லது பிரித்தானியாவின் கையாளுகைகளுக்கே அடிமைகளாகத் தொடர்ந்தும் இருப்பதா என்பது குறித்த விவாதத்தை இந்தப் படிப்பினை எழுப்புகிறது. வல்லாதிக்க எதிர்ப்பரசியலை ஓர் உத்தியாக ஆதல் பயன்படுத்த அறிந்திருக்கவேண்டும். இதைப் படிப்பதற்கு நெடுந்தொலைவு ஒன்றும் போகத் தேவையில்லை. சிங்கள சக்திகளைச் சற்று நோக்கினாலே போதும்.

தமிழ் சிவில் சமூகத் தளத்தில் இருக்கும் ஆளுமைகள் கோரிக்கைகளையும் சொல்லாடல்களையும் தமக்கு நிதியூட்டம் வழங்கும் மேற்குலக சக்திகளுக்கு இயைவாக வரைபுபடுத்துவதில் எவ்வளவு நுட்பமாகச் செயற்படுகின்றன என்பதும் தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இது தொடர்பான அதிகமான அறிவும் புரிதலும் தேவைப்படுகிறது என்பதும் இங்கு முக்கியமாகிறது.

ஆங்கில மொழிக்குச் சமாந்தரமாகத் தமிழ் மொழியில் கோரிக்கையை வடிவமைத்து வெளிப்படைத்தன்மையுடன் விவாதிக்கும் போக்கு இல்லாமல், ஆங்கிலம் தெரிந்த ஒரு சில ஏகாதிபத்திய அடிவருடிக் கனவான்களிடம் வரைபுக்கான மொழிக் கையாளுகையை "அவுட்சோர்ஸ்" பண்ணுவது ஆபத்தானது என்பதைப் பலரும் புரிந்திருக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் அப்பால், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோருவதிலும் அதற்கான சாட்சியப் பொறிமுறையைக் கோருவதிலும் ஒரு முக்கிய நகர்வாக இந்த ஒருங்கிணைந்த கோரிக்கையின் பலத்தை உலகளாவிய தமிழர்கள் பயன்படுத்தி, தமது சர்வதேச நகர்வுகளை இன அழிப்புக்கான சர்வதேச நீதி என்ற ஒரே திசையில் ஆற்றுப்படுத்தவேண்டும்

எனினும், இரண்டு இடங்களில் இன அழிப்பு என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும் அளவுக்கு கனதியான அழுத்தம் இருந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, தமிழ்த் தேசியச் செயற்பாட்டுத் தளத்தில் இருப்போர் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் ஆட்டுவிப்போராக இருக்கவேண்டும்.

அதேவேளை, வல்லாதிக்கங்களையும் ஆட்டுவிக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும்.

எல்லாவற்றுக்கும் அப்பால், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோருவதிலும் அதற்கான சாட்சியப் பொறிமுறையைக் கோருவதிலும் ஒரு முக்கிய நகர்வாக இந்த ஒருங்கிணைந்த கோரிக்கையின் பலத்தை உலகளாவிய தமிழர்கள் பயன்படுத்தி, தமது சர்வதேச நகர்வுகளை இன அழிப்புக்கான சர்வதேச நீதி என்ற ஒரே திசையில் ஆற்றுப்படுத்தவேண்டும்.

முழுக் கோரிக்கைக் கடிதத்தின் தமிழ் வடிவம் வருமாறு:

15 ஜனவரி 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு :

மாண்புமிகு தூதர்களே,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 46வதுகூட்டத்தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறுகோரல்

இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடருக்கு ஆயத்தமாகிற இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஆகிய நாம் இக்கடிதத்தினை எழுதுகிறோம்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வாரகாலத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.செயலாளர் நாயகத்தோடு 23 மே 2009ம் திகதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

" இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளுக்கும், சர்வதேசமனித உரிமை விழுமியங்களுக்கும் அமைவாக,மனித உரிமைகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதை விசாரிப்பதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இந்த முறைபாடுகளை விசாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்"

மேற்சொன்ன உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கை எதுவும் எடுத்திராத பின்புலத்தில், இலங்கையில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் எழுந்த மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கென்று,22 ஜூன் 2010 இல் மூவர் அடங்கிய குழு ஒன்றை செயலாளர் நாயகம் நியமித்தார். நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை மார்ச் 2011 இல் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்பு செப்டெம்பர் 2011 இல் இவ்வறிக்கையை செயலாளர்நாயகம் ஐ.நா.மனித உரிமை பேரவை தலைவரிடத்திலும் ஐ. நா மனித உரிமை ஆணையாளரிடத்திலும், பாரப்படுத்தினார்.

பின்பு ஐ.நா.மனித உரிமைப் பேரவை "இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்" என்ற19/02 தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்பின்பு இவ்விடயத்தை தன்னகத்தே வைத்திருந்து மார்ச் 2013 இலும் மார்ச் 2014 இலும் தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும்தீர்மானங்கள் 30/01 (ஒக்டோபர் 2015), 34/01(மார்ச் 2017) மற்றும் 40/01(மார்ச் 2019) ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

இலங்கையின் அரசியல் வெளியில் இரண்டு பிரதான அரசியல்கட்சிகள் உள்ளடங்கலாக, அரசியல் தலைவர்கள், விதிவிலக்கு இல்லாமல், இலங்கையின் படைத்தரப்பினரை நீதிவிசாரினையிலிருந்து பாதுகாப்போம் என்று கூறிவந்துள்ளார்கள். ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாக இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம்வந்துவிட்டது.

இராணுவமயமாக்கல், அரசியல் கைதிகளை கால வரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின் பாரம்பரியமானதும் கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதை தீவிரப்படுத்துதல், கோவிட்19 ஆல் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாசா அடக்கத்தை மறுத்தல், நினைவேற்றல் உரிமையை மறுத்தல் போன்ற தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக் காட்டுகின்றன.

ஐ.நா.மனித உரிமைப் பேரவை பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தீர்மானம் 40/01 இன் கீழ் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காக கூடுகையில் இவ்வாறான முடிவெடுத்து இறுதித்தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும். இத்தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறைமூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பிரகடனப்படுத்த வேண்டும்.

நாம் பின்வருவானவற்றைக் கோருகிறோம் :

1. இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேசபொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

2. ஐ. நா.மனித உரிமைப் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும்செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

3. ஐ. நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களை கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

4. மேலே 1) இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளை சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (IIIM) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல்.

பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும்வலியுறுத்துகிறோம்.

ஆகையால் இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்துகிறோம்.

(கையொப்பங்கள்)