புவிசார் அரசியல் மீண்டும் அரசுக்குச் சாதகமாக விரிகிறதா?

அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் பீரிசுடன் சுமந்திரன் சந்திப்பு

தமிழ்த் தரப்பு சரியான திசையில் தனது விவாதத்தை முன்னெடுக்கவேண்டும்
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 08 16:42
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 09:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
புவிசார் அரசியலில் இலங்கையைத் தனது கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் அமெரிக்காவுக்கு பசில் ராஜபக்ஷ பயணித்திருந்தபோது இரகசிய நகர்வொன்றை முன்னெடுத்திருந்தது. பசில் ராஜபக்ஷவுடனும் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான புலம்பெயர் தமிழ்க்குழு ஒன்றுடனும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. சுமந்திரனுடனும் இணக்கத்தை ஏற்படுத்தி ஓர் இரகசிய நகர்வை ஆரம்பித்த தகவலையும் அதன் புவிசார் அரசியற் பின்னணியையும் ஜூன் 20ம் திகதி கூர்மை ஆசிரியபீடம் வெளிப்படுத்தியிருந்தது. இந்த இரகசிய நகர்வின் அடுத்த கட்டம் தற்போது அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் அலெய்னா தெப்லிஸின் முன்னிலையில் அமைச்சர் பீரிசுடன் சுமந்திரன் இரகசியமாகக் கலந்துரையாட வைக்கப்பட்டதன் மூலம் நகர்த்தப்பட்டிருக்கிறது.
 
இது தொடர்பான ஒரு செய்தியை வீரகேசரி இன்று வெளியிட்டிருக்கிறது. பீரிசுடன் சுமந்திரனின் சந்திப்பு இடம்பெற்ற நாள், அது நடைபெற்ற இடம், அது எவர் முன்னிலையில் இடம்பெற்றது என்பதை வீரகேசரியின் செய்தி குறிப்பிடவில்லை. எனினும் பெயர் குறிப்பிட விரும்பாத தகவல் அறிந்த வட்டாரங்கள் இச் சந்திப்பு அமெரிக்கத் தூதரின் முன்னிலையில் நடைபெற்றதாகக் கூர்மை செய்தித்தளத்துக்குத் தெரிவித்தன.

அமைச்சர் பீரிசுடன் சுமந்திரனைச் சந்திக்கவைத்து முன்னெடுக்கப்படும் நகர்வுக்குப் பின்னால் அமெரிக்க அரசும் அதன் நலன் சார்ந்து செயற்படும் அணிகளும் இருக்கின்றன என்ற தகவல் நுட்பமாக மறைக்கப்பட்டுவருகிறது.

பசில் ராஜபக்ஷ, சுமந்திரன், சுரேன் சுரேந்திரன் நகர்வு பற்றிய கட்டுரையை ஜூன் மாதம் வெளியிட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இந்தியத் தூதராலயம் கூர்மை ஆசிரியபீடத்துடன் தொடர்புகொண்டு, ஆனால் கட்டுரைகுறித்து ஆழமாக எதையும் கேட்காமல், மேலோட்டமாக அளவளாவ முயன்றிருந்தது.

அதைத் தொடர்ந்து ஆசிரியபீடத்துடன் உரையாடிய தமிழரசுக் கட்சி அல்லாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், இந்தியத் தூதுவரைத் தாம் சந்தித்தபோது அவர் இலங்கை அரசுடன் எப்போது கலந்துரையாட உள்ளீர்கள் என்று கேட்டதாகவும், அதற்குப் பதிலளித்திருந்த சுமந்திரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் அந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்ப்பதாகப் பதிலளித்ததைத் தாம் உற்றுக் கவனித்ததாகவும் கூர்மைக்குக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியாவிடம் நேரடியாகத் தமிழர் தரப்புக் கோரிக்கைகளை உறுதியாக முன்வைக்காத சூழலில், தமிழ்நாட்டையும் புலம்பெயர் தமிழர்களையும் ஓரங்கட்டி ஒரு புதிய இணக்க அரசியற் பாதை ஒன்றை அமெரிக்கா முன்னெடுக்க முயல்கிறது என்பது தற்போது சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் தெளிவாகியுள்ளது

தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு முயற்சிகள் தொடர்பான கேள்விகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளே குறித்த வட்டாரங்களால் எழுப்பப்பட்டதையும் அவதானிக்கமுடிந்தது.

இதேவேளை கடும்போக்கு சிங்களத்தரப்புகளில் ஒரு சாராரும் திருகோணமலையை அமெரிக்கத் தலைமயிலான குவாட் அணிக்கு தாரைவார்க்கும் நகர்வொன்றை ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்திருந்தார்கள்.

அமெரிக்காவுக்குப் பயணித்தபோது தனது சகோதரர்களுக்கே தெரியாது பசில் பயணிக்க முயன்றது போலவும் இறுதிக்கணத்திலேயே அவர்களுக்கு அது தெரியவந்ததாகவும் செய்திகள் தென்னிலங்கை ஊடகங்களில் கசியவிடப்பட்டிருந்தன.

அமெரிக்காவிலிருந்து பசில் இலங்கை திரும்பியதும் அவர் நிதியமைச்சர் ஆகியுள்ளார்.

2002 இல் நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கை அரசின் தலைமைப் பேச்சாளாராக பேராசிரியர் பீரிஸ் பங்குபற்றியிருந்தார்.

அப்போது சுமந்திரனும் அமெரிக்கத் தரப்பு விரும்புவதுபோல விடுதலைப்புலிகளின் தலைமை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையில் விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்ற போதனைகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது.

பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குள் (2004 மே மாதம்) இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதற்கும் ஒருவருடத்திற்கு முன்பதாக 2003 இல் புவிசார் அரசியலால் மேற்கு நாடுகளின் இணைத்தலைமை என்ற கட்டுக்குள் பேச்சுவார்த்தையின் முழு நகர்வும் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தியாவின் நழுவற்போக்கின் பின்னணியை ஈழத்தமிழர்கள் சரியாக விளங்கிக்கொள்வது அவசியம். குறிப்பாக ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தனது இருப்பை உறுதிசெய்துகொள்ளும் அரசியற்தீர்வுக்கு வழிவகை செய்யாமல், தனது நலனை மட்டுமே முன்வைத்த செயற்பாட்டில் இந்தியா எப்போதும் தமிழர்களைப் பயன்படுத்தி, இலங்கை அரசைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு, பின்னர் ஈழத்தமிழர்களைக் கைவிட்டுவிடுவதே வழக்கமாக இருந்துவருகிறது.

இதற்குத் தமிழ்நாடு தொடர்பாக வட இந்தியாவுக்கு இருக்கும் பார்வை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இது தொடர்பான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் தரப்பும் தமிழ்நாட்டுத் தரப்பும் இணைந்து இந்திய அரசுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையும் இருக்கிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே புவிசார் அணியில் இருக்கும் தற்போதைய காலத்திலும் சரி, அவை இரண்டும் வேறு வேறு அணியாக இருந்த பனிப்போர்க் காலத்திலும் சரி, ஈழத்தமிழர்கள் மீதான இந்திய அணுகுமுறை மாற்றமடையாது இருப்பது என்பது ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது.

இதேவேளை, ஈழத்தமிழர் தரப்புக் கோரிக்கைகளை இந்தியாவிடம் ஆணித்தரமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்காதபடி பார்த்துக்கொள்வது சுமந்திரனின் முனைப்பாக இருந்து வந்துள்ளது என்ற கருத்து தமிழ்த் தேசிய வட்டாரங்களுக்குள் ஏற்பட்டுள்ளது. இந்தக் கருத்தை அவரே ஒத்துக்கொண்டும் உள்ளார். தனது அணுகுமுறையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒளியியற் பார்வை (கட்புலக் கோணம்) என்றும் அவர் வருணித்திருந்தார்.

இந்தியாவிடம் நேரடியாகத் தமிழர் தரப்புக் கோரிக்கைகளை உறுதியாக முன்வைக்காத சூழலில், தமிழ்நாட்டையும் புலம்பெயர் தமிழர்களையும் ஓரங்கட்டி, ஈழத்தமிழருக்குள் புதிய ஓர் இணக்க அரசியற் பாதை ஒன்றை அமெரிக்கா முன்னெடுக்க முயல்கிறது என்பது தற்போது சந்தேகத்துக்கு இடமற்ற வகையில் தெளிவாகியுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான இந்திய, ஜப்பானிய, அவுஸ்திரேலிய குவாட் கூட்டின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலுக்குள் தமிழர் தரப்பு விட்டுக்கொடுப்புகளுடன் செல்லவேண்டும் என்று மேற்கின் நிதியில் இயங்கும் கருத்துருவாக்கிகள் தமிழர் மத்தியில் தமது போதனைகளை இனிவரும் நாட்களில் முன்னெடுப்பர்

அமெரிக்கா தலைமையிலான இந்திய, ஜப்பானிய, அவுஸ்திரேலிய குவாட் கூட்டின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலுக்குள் தமிழர் தரப்பு விட்டுக்கொடுப்புகளுடன் செல்லவேண்டும் என்று மேற்கின் நிதியில் இயங்கும் கருத்துருவாக்கிகள் தமிழர் மத்தியில் தமது போதனைகளை இனிவரும் நாட்களில் முன்னெடுப்பர்.

இந்தப் பின்புலத்தில் இருந்தே அண்மையில் தமிழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ''வட்டுக்கோட்டை-2'' என்ற கேள்விக்குரிய நகர்வு தொடர்பாகக் கூர்மை செய்தித்தளம் ஆரம்பித்துவைத்த விவாதத்தை நோக்கவேண்டும். இந்த நகர்விலே சுமந்திரன் அணி பங்கேற்கவில்லை. மாவை அணி பங்கேற்பதற்கு உந்தப்பட்டபோதும் இறுதியிலே ஆறாம் சட்டத்திருத்தம் ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி காரணமான பயத்தினால் விலகிக்கொண்டுவிட்டது.

இதேவேளை வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று ஒன்றுதான் இருக்கமுடியும் அதற்கு இரண்டு, மூன்று எல்லாம் ஏற்படுத்தப்படமுடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேசியம் மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்த புரிதல் கொண்டவர்கள் மட்டுமல்ல இதர கட்சி நலன் குறித்துச் செயற்படுபவர்களும் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். (இதை அந்த இணையவழி மாநாட்டை நடாத்திய சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் இராமு மணிவண்ணனும் இறுதியாக ஒத்துக்கொண்டுவிட்டார். தான் வட்டுக்கோட்டை-2 என்ற ஒழுங்குபடுத்தும் குழுவில் இல்லை என்றும் கூட்டத்தை மட்டும் தலைமை தாங்கி நடாத்த முன்வந்ததாகவும் அவர் சமூகம் என்ற ஊடகத்துடனான செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார்.)

தமிழ்த் தேசியப் பரப்பு இவ்வாறான விவாதத்தில் மூழ்கியிருக்க, மறு முனையில் அமெரிக்கா தலைமையிலான குவாட் அணியுடனான இணக்க அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக மீண்டும் கதைத்து காலத்தை நீடித்து ஜெனீவா மனித உரிமை நகர்வையும் அதற்கும் அப்பாற்பட்ட இன அழிப்புக்கான சர்வதேச நீதியையும் நீர்த்துப்போகச்செய்யும் நாசூக்குத் தன்மையுடன் தொடர்கிறது.

கையாலாகாதவர்களாகவும் கையாளப்படும் தரப்பாகவும் தமிழர் தரப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைப் பாரளுமன்ற இருக்கைகளுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைப் புதைத்துவிட்டு, சுயநிர்ணய உரிமையைத் தாம் அனைவரும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, திசைமாறிய பறவைகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில் மட்டுமே குறியாய் இருந்தால் அரசியல் நிலைப்பாட்டை தமிழர் தரப்பின் வெளியுறவுக் கொள்கையாக மட்டுமல்ல உள்ளார்ந்த கொள்கையாகவும் முன்வைக்க முடியாது.

இதை உணர்ந்த நிலையில் ஈழத்தமிழர் அரசியற் பாதை வகுக்கப்படவேண்டும்.