கோட்டாபயவின் கொள்கை விளக்கவுரையில் வெளிப்பட்ட உண்மை-

ஆத்திரமடைந்த சம்பந்தன் பசிலுடன் நேரடித் தர்க்கம்

ஏமாற்றிவிட்டீர்கள் என்று ஆவேசமாகக் கூறினார்- நேரடியாகக் கண்ட செய்தியாளர் தகவல்
பதிப்பு: 2022 ஜன. 18 14:11
புதுப்பிப்பு: ஜன. 18 21:21
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் திட்டமிடலோடு சுமந்திரன் அணி, செல்வம் அணி என இரண்டாகப் பிரித்து அமெரிக்க- இந்திய அரசுகளினால் கையாளப்பட்டவொரு நிலையிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இரண்டாவது கொள்கை விளக்கவுரையில் தேசிய இனப்பிரச்சனையென ஒன்று இருப்பதாக எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. இனப்பிரச்சனையை வெறுமனே பொருளாதாரப் பிரச்சனை என்ற கோணத்திலேயே கோட்டாபய ராஜபக்ச விபரித்துள்ளார். வடக்குக் கிழக்குத் தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் நிலைப்பாடுகளைக் கைவிட்டு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் தனது கொள்கை விளக்கவுரையில் பகிரங்கமாக அழைப்பும் விடுத்திருக்கிறார்.
 
கோட்டாபய ராஜபக்சவின் உரையில் அரசியல் தீர்வு பற்றிய விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் கொழும்பில் இருந்து பிரசுரமாகும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழில் வெளியான கட்டுரை பொய்த்து விட்டதென்றும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஏமாந்துவிட்டதாகவும் இராஜதந்திரியொருவர் சிரித்துக் கொண்டே தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முகநூலில் பதவிட்டுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சம்பந்தன் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார் எனவும், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நேரில் கண்டு, 'நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்' என ஆவேசமாக ஏசினாரெனவும் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவுக்குச் சம்பந்தன் ஆவேசமாக ஏசியதைத் தான் நேரில் அவதானித்ததாக அந்த நாடாளுமன்றச் செய்தியாளர் கூறினார்.

கொள்கை விளக்கவுரையில் தமிழ் மக்களின் பிரச்சனைத் தீர்வு விவகாரங்கள் அதற்கான நகர்வுகள் பற்றி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக ஏதாவது கருத்து வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு சம்பந்தன் சபைக்கு வந்திருந்தாரெனவும், ஆனால் உரையில் எதுவுமே கூறப்படாததால் ஆத்திரமடைந்த நிலையில் பசில் ராஜபக்சவுடன் தர்க்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தின் பின்னணியில், கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் வெளிவரலாமெனச் சம்பந்தன் எதிர்பார்த்திருந்தாரெனக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொள்கை விளக்கவுரை இடம்பெற்றபோது சபாநாயகர் கலரியில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பங்குபற்றவில்லையெனவும், மாறாக இரண்டாம் நிலை இராதந்திரிகளே பங்குபற்றியிருந்ததாகவும் நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை, 'மிக மோசமான உரை' என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து எந்தவொரு காத்திரமான விடயமும் முன்வைக்கப்படவில்லை. அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு அரசாங்கத்தின் வாழ்வாதாரச் செயற்பாடுகளில் ஒத்துழைக்க வேண்டுமென்று வடக்கு கிழக்குப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததில் எவ்வித யதார்த்தமும் இல்லை என்று சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்களித்த தமிழ் மக்களுக்கு எதனைக் கூறுவது என்ற தொனியைச் சுமந்திரன் தனது கண்டனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எதுவுமே இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் வடக்கு கிழக்கில் படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை கையளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் பல காணிகள் விரைவில் கையளிக்கப்படுமெனவும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ள கோட்டாபய ராஜபக்ச ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி எதுவுமே கூறவில்லை.

பொருளாதார நெருக்கடியினால் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வழங்கியுள்ள நிதியுதவிகள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்கவுரையில் எதுவுமே கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.