2019 இன் புதிய ஆட்சி எத்திசையில் பயணிக்கும்?

இந்திய நடுவண் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - இந்திய அமைதிப்படை ஆலோசகர் ஜெயசங்கர் அமைச்சராகிறார்

இந்தியா இனி முழுமையான அமெரிக்கப் பாதையா?
பதிப்பு: 2019 மே 31 03:32
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: மே 31 14:56
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#IndianFederalGovernment
#Election2019
#India
#BJP
#NirmalaSitharaman
#SubrahmanyamJaishankar
இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பா.ஜ.கவின் புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ளது! தமிழ் தெரிந்த இருவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளனர். எந்தத் துறை என்பதும் கூடியவிரைவில் வெளியாகும். அதில் ஒருவரான நிர்மலா சீதாராமன் 2017 - 2019இல் இராணுவ அமைச்சராக பதவிவகித்தவர். இன்னொருவரான ஜெய்சங்கர் 1988-1990 இல் இந்திய அமைதிப்படைக்கான அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்பதும், ஜெய்சங்கர் மற்றும் அவரது தந்தை சுப்ரமணியன் அவர்கள் இருவருமே இந்திய - அமெரிக்க ஒப்பந்தங்கள் பலவற்றில், குறிப்பாக அணுசக்தி விவகாரங்களில், ஆலோசகராகவும் இருந்தவர்கள். இந்திய வெளிவிவகார அதிகாரிகளில் மாந்தரின், ஜப்பான், ருசிய மொழிகளில் புலமை வாய்ந்த வெகுசிலரில் ஜெய்சங்கரும் ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
 
2014இல் நடந்த தேர்தலில் 283 இடங்கள் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த பா.ஜ.க, இம்முறை 303 இடங்கள் பெற்று கூடுதலான பெரும்பான்மை பெற்றிருந்தது. புதிய அமைச்சரவை பதயேற்பு விழாவில், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் நாடுகளின் அரச பிரதிநிதிகள் பங்கேற்பு.

புதிய அமைச்சரவை நேற்று, 30.05.2019 அன்று பதவியேற்றுக்கொண்டது. 2019 அமைச்சரவையில் எந்தத் துறை யாருக்கு என்பது இன்னும் வெளியாகவில்லை. தமிழகத்தின் சார்பில் அமைச்சரோ, அல்லது இணை அமைச்சர்களேனும் ஓரிருவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதென்று செய்திகள் தெரிவித்து வந்த நிலையில், யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை குடும்பத்தின் வசிப்பிடமாகக் கொண்டிருந்த இருவர் (நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர்) அமைச்சராகினர். ஆனபொழுதும், தமிழகத்தில் இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக வசித்திருக்கவில்லை என்பதும், எத்தொகுதியிலும் போட்டியிட்டு வெல்லாமல் நியமன அமைச்சர்களாகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, இவர்கள் இருவருமே தமிழ்நாட்டின் நலனில் அக்கற்றையற்றவர்கள் என்ற பார்வையும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் அங்கமாக தங்களை இவர்கள் இருவருமே என்றும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.கவின் ஆட்சி இருந்த 1999-2004 காலகட்டத்தில், நிர்மலா சீத்தாராமன் தேசிய மகளிர் ஆணையகத்தின் முன்னாள் உறுப்பினராக (2003-2005) பதவி வகித்தவர். 2014 மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதலில் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார், பிறகு 2017 செப்டம்பர் 3 முதல் இந்திய நடுவனரசு பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகித்த இரண்டாம் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர் அமெரிக்கத் தூதுவராய் இருந்த வேளையிலேயே, 2015இல் இந்திய ஒன்றியத்திற்கு பயணித்த ஒபாமாவின் குழுவோடு டெல்லி வந்திருந்தார். அப்பொழுதே, இந்திய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் தமிழக அரசியல் விமர்சகர் கூர்மைக்குக் கருத்துத் தெரிவித்தார்.

2009 - 2013 வரை சீனாவிற்கான இந்தியத் தூதுவராகவும் பணியாற்றியவர். இந்தியத் தூதுவர்களில் மாந்தரின், ரசியா, ஜப்பானிய மொழிகளில் புலமை வாய்ந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர். அதோடு, 1988-1990 காலங்களில் இந்தியாவின் முதன்மை செயலாளராகவும் இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராகவும் பதவி வகித்தவர்.

நிரூபமா ராவ் அவர்களுக்கு பின்னர் 2013இல் அமெரிக்காவிற்கான இந்தியாவின் தூதுவராக பணியாற்றிய காலங்களிலேயே, இந்திய அமெரிக்க உறவில், குறிப்பாக அணுசக்தி கொள்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார் என்பதும் இந்திய அளவில் அக்காலங்களில் வெற்றிச் செய்தியாக ஊடகங்களில் எதிரொலித்தது.

இவரது தந்தை சுப்ரமணியம் அவர்கள், 1966 இல் இருந்து பல ஆண்டுகள், இந்திய இராணுவ கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர். 2007இல் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கான ஆலோசனைக் குழுவின் பொறுப்பாளாராகவும் இருந்தவர். தந்தை, மகன் இருவருமே இந்திய ஒன்றியத்தினை அமெரிக்கப் பாதைக்குத் திருப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர் அவர்களின் மனைவி ஜப்பானியர். இரண்டு மகன்களில் ஒருவர் அமெரிக்காவின் ஜெர்மன் மார்சன் நிதியகத்தின் முதுநிலை உறுப்பினர் மற்றும் மகள் ரிலையன்ஸ் பொழுதுபோக்கு நிறுவனத்தின் செயல்நிறைவேற்றுத் தலைவர்.

இவரது குடும்பத்தின் பின்னணி, அமெரிக்கத் தொடர்பு, அணுசக்தி கோட்பாடு அரசியல் வடிவப் பின்னணி, ரிலையன்ஸ் நிறுவனத் தொடர்பு, பா.ஜ.கவின் அமைச்சர் ஆகிய பாதை தமிழ்நாட்டினர் கவனமாக உற்று நோக்க வேண்டிய நபர் இவர் என்பது தெளிவாகிறது என அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்ட தமிழ்நாட்டுத் தமிழர் கூர்மை செய்தித்தளத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பார்வை:

2014இல் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அ.தி.மு.க தனித்து நின்று, தமிழகத்தில் 39 இடங்களில் 37 பெற்றிருந்த நிலையில், 2019இல் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி 37 இடங்களைப் பெற்றுள்ளது. தேனியில் மட்டும் தமிழகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களது மகன் இரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தொகுதி போட்டியிட்ட 10 இடங்களில் தோற்றத் தொகுதியும் இதுதான். இத்தொகுதியில் காங்கிரஸின் சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எதிர்த்துப் போட்டியிட்டார்.

தேர்தல் முடிந்த கையோடு, ஓ.பன்னீர் செல்வமும் இரவீந்திரநாத் அவர்களும் பா.ஜ.கவின் தலைமைகளைச் சந்தித்து வந்ததோடு, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கட்சிகளின் அடையாள நிறமான காவி உடைகளை அணிந்து திரிந்தனர். அதோடு, தேர்தல் முடிவு வெளியாகும் முன்னரே தேனி தொகுதியில் நடந்த கோயில் விழா கல்வெட்டில் இரவீந்திரநாத், எம்.பி என்று பதிந்து வைத்தனர் என்பதும் சர்ச்சையாகியது. வாக்கு இயந்திரங்கள் அத்தொகுதியில் காணாமல் போனதும், திடீரென்று முளைத்ததும் தமிழக அளவில் சர்ச்சையாகி ஓய்ந்துவிட்டது.

பா.ஜ.க வெற்றி பெறாத மாநிலங்கள் குறித்த பார்வை:

இந்திய ஒன்றிய அளவில் பெரும்பான்மையை பா.ஜ.க கட்சி பெற்றிருந்தும், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர மாநிலங்களில் ஒரு இடம் கூட பெறவில்லையென்பதும், தெலுங்கானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிக அளவிலான வெற்றியைப் பெறவில்லை என்பதும், மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றிக்கு ஈடுக்கொடுக்கவில்லை என்பதும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்தது.

அதேபோன்று, ஆந்திர மாநிலத்தில் 18 இடங்களில் நோட்டா (எக்கட்சிக்கும் ஆதரவில்லை என வாக்களித்தோர்) எண்ணிக்கைக்கு கீழே வாக்குகளை பா.ஜ.க பெற்று படுதோல்வியினைச் சந்தித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்மாநிலங்களைப் பொறுத்தவரை, கருநாடகம் தவிர்த்து பா.ஜ.க எங்குமே வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கேரளம் மற்றும் தமிழகம் தவிர்த்து பெரு வெற்றி எங்குமே பெறவில்லை.

ஆந்திர மாநிலத்தில், காங்கிரஸின் சார்பில் முதலமைச்சராக இருந்து பதவிக்காலத்தில் விபத்தில் இறந்த ராஜசேகர் அவர்களின் மகன் ஜெகன் மோகன் அவர்களின் புதியக் கட்சி (ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்) மாநிலத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டிலும் மாபெரும் வெற்றி பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 25 இடங்களில் 22 இடங்களை பெற்றுள்ளது. அதேநேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 175 இடங்களில் அவரது கட்சி 151 இடங்களைப் பெற்றுள்ளது.

பா.ஜ.கவும் காங்கிரஸும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் இரண்டு தேர்தல்களிலும் ஒரு இடங்கள் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் மம்தா பேணர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸிற்கு எதிராக அம்மாநிலத்தை 25 ஆண்டுகளாக ஆண்டு வந்த மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் பா.ஜ.க ஆதரவு இருந்தும் 42இல் 22 இடங்களை அக்கட்சி பெற்று பா.ஜ.க 18 இடங்களைப் பெற்றுள்ளதும், அம்மாநிலத்தில் பா.ஜ.க இதுவே முதன்முறை அதிக இடங்கள் பெற்றுள்ளது.

1977இல் இருந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட் பிரிவு) ஆட்சியை திரிணாமூல் காங்கிரஸின் மம்தா பேணர்ஜி 2011இல் முடிவுக்குக் கொண்டு வந்தது முதல் அவர் மீது கடும் கோவத்தில் இருந்த பொதுவுடமைக் கட்சியினர் இம்முறை பா.ஜ.கவிற்கே மறைமுகமாக ஆதரவளித்ததன் விளைவே பா.ஜ.க வேரூன்ற உதவியது பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலத்தின் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களையும் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் பிரிவு) 1 இடத்தினையும் பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் காங்கிரஸும் இடதுசாரிக் கட்சியும்தான் மாறி மாறி மாநில ஆட்சியைக் கைப்பற்றும் என்பதும் நடப்பு காலத்தில் இடதுசாரிகளின் ஆட்சியே கேரளாவில் இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் கேரள முதல்வர் பின்ராய் விஜயன் தமிழகத்தில் ஆதரவினையும் பெற்றுள்ளவர் என்பதும் இங்கு முக்கியம்.

அதேபோன்று, முதன்முறையாக தென் இந்தியாவில் காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாட்டில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார். அவர் இம்முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காலங்காலமாக காங்கிரஸின் முன்னணித் தலைவர்கள் போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் பா.ஜ.கவின் அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோற்றுவிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை 13 தொகுதியில் காங்கிரஸ் 8 தொகுதிகளையும் பி.ஜே.பி-சிரோமணி அகாலிதல் தலா இரண்டு தொகுதிகளையும் ஆம் ஆத்மி 1 இடங்களையும் பெற்றுள்ளது. 2017இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 117 இடங்களில் 77 இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா மாநிலம் மிகச் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவானது முதல் அம்மாநில உருவாக்கத்திற்கு போராடிய தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியே மாநில ஆட்சியிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கோலோச்சி வந்துள்ளது. 2019 தேர்தலிலும் 17 இடங்களில் 9 இடங்கள் அக்கட்சியும் பாஜக 4 மற்றும் காங்கிரஸ் 3 இடங்களும் பெற்றுள்ளது.