தமிழ் பேசும் கிழக்கு மாகாணம்

திருகோணமலை சம்பூரில் மீண்டும் அனல்மின் நிலையம்

இந்தியா உதவி - பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படவுள்ளதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 மே 31 15:00
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 03:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Trincomalee
#SAMPOOR
#Thermalpowerstation
#Srilankacabinet
#lka
#Srilanka
#Ranilwickramasinghe
#Ravikarunanayake
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திலும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழும் புத்தளம் - நுரைச்சோலைப் பிரதேசத்திலும் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. திருகோணமலை பவுல் பொயின்ட் பகுதியில் முந்நூறு மெகாவாட் உற்பத்தித் திறன் உள்ள, இரண்டு உயர் திறன்மிக்க அனல்மின் நிலையங்களும், நுரைச்சோலையில் 300 மெகாவாட் உள்ள மற்றொரு அனல் மின் நிலையமும் அமைக்கப்படவுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ரவி கருணாநாயக்க, இதற்கான அனுமதிப்பத்திரத்தை நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
 
அதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மூன்று அனல்மின் நிலையங்களில் இரண்டு அனல்மின் நிலையங்கள் திருகோணமலைப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளன.

திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் 2011 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தன

இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது திருகோணமலை சம்பூரில் ஐநூறு மெகாவாட் திறன் உள்ள அனல்மின் நிலையத்தை இந்தியாவின் ஒத்துழைப்புடன் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சம்பூர் மக்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் கடும் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் சம்பூரில் மீண்டும் அனல்மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் மின்சார உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அனல்மின் நிலையங்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் அமைக்கப்பட்டு விடுமென அமைச்சர் ரவி கருணாநாயக்கா கூறினார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் திருகோணமலையை மையப்படுத்தி கிழக்கு மாகாணத்தை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் கூறுபோட்டு வருவதாகவும் அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள், அதற்கான காணி அபகரிப்புகள் போன்ற சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் ஏலவே கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சம்பூர் பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்புச் செய்து, மீண்டும் அங்கு அனல்மின் நிலையத்தை அமைக்க ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் முற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால், மீன்பிடி, விவசாயம் போன்ற வாழ்வாதார தொழில்கள் பாதிக்கப்படுமென சம்பூர் மக்கள் கூறுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு மகிந்த ஆட்சியில் அனல்மின் நிலையம் அமைக்க முற்பட்ட போது அதற்கு எதிராகவும், மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட ஆயிரத்து்க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரியும் இலங்கை ஒற்றையாட்சியின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மக்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தினால் சம்பூர் பகுதியில் இலங்கை அரசாங்கத் தேவைக்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர்நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அபகரிக்கப்பட்டிருந்த காணிகளில் எண்ணூற்று 18 ஏக்கர் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி உரியவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீ்ண்டும் அங்கு அனல் மின் நிலையம் அமைக்க இலங்கை அரசாங்கம் திட்மிட்டுள்ளது.

இந்திய அரசின் ஒத்துழைப்புடனேயே சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் 2011 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தன.

அனல்மின் நிலையம் அமைப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் சம்பூரில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் பதவியேற்றதும் 2016 ஆம் ஆண்டு கைவிடப்பட்டிருந்த அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டம். மீண்டும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.