உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

பௌத்த பிக்குமார் உண்ணாவிரதம் - மைத்திரி, ரணில் மௌனம்

ரிஷாட் பதியுதீனை ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து காப்பாற்றுவர் - ஜலீல் கூறுகின்றார்
பதிப்பு: 2019 ஜூன் 01 22:08
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 17:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EastersundayAttack
#AthuraliyeRathanaThero
#BoduBalaSena
#HungerStrike
#Kandy
#Srilanka
#lka
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் கிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவி விலக்குமாறு கோரி இலங்கையின் தலைநகர் கொழும்பு, கண்டி ஆகிய பிரதேசங்களில் பௌத்த குருமார் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுழற்சி முறையில் பௌத்த பிக்குமார் கலந்துகொள்கின்றனர். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கின்றார். நூற்றுக்கும் அதிகமான பௌத்த குருமார் தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக சுழற்சி முறையில் பங்குபற்றி வருகின்றனர்.
 
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் கண்டிக்குச் சென்று அத்துரலியே ரத்ன தேரரின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

ஞானசார தேரருடன் மேலும் பல பௌத்த குருமார் கண்டிக்குச் சென்று அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

பௌத்த குருமார் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ இதுவரை எதுவுமே கூறவில்லை.

மாறாக, அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்க ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை யாழ்பாணத்திற்குச் சென்றுள்ளார்.

அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து ரிஷாட் பதியுதீனை அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் மூத்த அமைச்சர்கள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனாலும் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டிய அவசியமில்லையென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அதேவேளை, ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னின்று தோற்கடிப்பார்களென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினரும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஜலீல் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனைத் தலைவராகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாறை மாவடிப்பள்ளியில் இன்று சனிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம் மக்களின் குரலாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செயற்படுகின்றார். இதனால் இவரின் குரல்வளையை நசுக்குவதற்கு பௌத்த பேரினவாதம் முயற்படுவதாகவும் ஜலீல் தெரிவித்துள்ளார்.