யாழ்ப்பாணம் - கொடிகாமம் வரணி வடக்குப் பிரதேசத்தில் உள்ள

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயப் பிரச்சினைக்குத் தீர்வு- நிர்வாகிகள் நியமனம்

தமிழர்கள் என்ற அடையாளத்துடன் ஒன்றித்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தல்
பதிப்பு: 2019 ஜூன் 02 22:25
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 04 03:56
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Varabi
#SimilkannakaiAmmanKovil
#HinduTemple
#Srilanka
#lka
யாழ்ப்பாணம் - கொடிகாமம் வரணி வடக்குப் பிரதேசத்தில் உள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் சமூக ஒடுக்குமுறைப் பிரச்சினைகளுக்குத் சுமூகமான முறையில் தீர்வு காண்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அனைத்துச் சமூகங்களும் ஆலயத் திருவிழாக்களில் பங்கெடுத்து தமிழ் மக்கள் என்ற அடையாளத்துடன் செயற்படுவதற்குரிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள், ஆலயத் திருவிழாவை நடத்துவது தொடர்பான விடயங்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்கு ஏற்ற பரிபாலன சபை ஒன்றுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
ஆலயத்தில் தொடர்ச்சியாக வழிபடுவோரின் ஏற்பாட்டில் சைவ அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் புதிய நிர்வாகம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக சபைக்கான தெரிவில் மேலும் பல பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு தமிழ் மக்கள் என்ற அடையாளத்தோடு ஒன்றித்துச் செயற்படுவதற்கான ஆலோசணைகளை முன்வைத்தனர்.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் போராட்டம் ஒன்றை நடத்திய தமிழச் சமூகத்திற்குள் ஒடுக்குமுறைகள், அக முரண்பாடுகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறவன்புலவு
ஈழத்தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளரும் இலங்கைச் சிவசேனையின் தலைவருமான மறவன்புலவு கணபதிப்பிள்ளை சந்திதானந்தன், சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சமூக ஒடுமுறைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும், சகலருக்கும் சமத்துவமான முறையில் ஆலய வழிபாடுகள் அமைய வேண்டுமென வலியுறுத்தியும் இன்றைய கூட்டத்தில் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட படம் இது- மறவன்புலவு க.சச்சிதானந்தம் இந்தியாவில் நரரேந்திர மோடி அரசால் வேகமாகப் பரப்பப்பட்டு வரும் இந்துத்துவா கருத்தியலுக்கும் அதன் அமைப்புக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றார். அத்தோடு இந்துத்துவாவை வடக்கு- கிழக்குத் தமிழர் பிரதேசங்களில் பரப்புவதில் தீவிரமாகவும் ஈடுபட்டு வருகின்றார். சிங்கள பௌத்த தேசியவாதப் பிக்குமாருடனும் இந்துத்துவா அடிப்படையில் இணைந்து செயற்படுகின்றார். இதனால் இவரை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பதில்லை. இவர் தொடர்பான அதிருப்திகள் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் நிறையவே உண்டு. ஆனாலும் சமூகவேறுபாடுகள் தமிழ்ச் சமூகத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை இன்றைய கூட்டத்தில் அவர் கூறியிருந்தார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 1977 முதல் 1979 வரையும், பதவி வகித்திருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் மத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தார்.

இந்த ஆலயத்தில் நூற்றாண்டு காலம் பூசை வழிபாடுகள் செய்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த அர்ச்சகர் பரம்பரையின் இறுதிப் பூசகர் தியாகராஜாக் குருக்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கடந்த கால நடைமுறைகள் தொடர்பாக அனைவருக்கும் விளக்கமளித்தார்.

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் எழுந்துள்ள சமூகப் பிரச்சினை காரணமாக ஒரு பகுதி மக்களுக்கான வழிபாட்டு உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்பட்டிருந்ததை தியாகராஜாக் குருக்கள் கண்டித்தார்.

வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதைக் கண்டித்து சாத்வீகப் போராட்டத்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது நாளாகவும் முன்னெடுத்தனர்.

ஆலய வழிபாட்டில் சமத்துவம் பேணப்பட வேண்டுமெனவும் ஆலய நிர்வாக விடயங்களிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் பேராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியிலேயே இந்தக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. தியாகராஜாக் குருக்கள் உட்பட கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் மக்களின் போராட்டம் நியாயமானதென்றும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடு இருக்கக் கூடாதென்பது தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் குறித்தே பலரும் வலியுறுத்தினர்.

அகில இலங்கை சைவ மகா சபை, சிவசேனை மத அமைப்புக்களின் பிரதிநிதிகள், வரணி கும்பிட்டான் புலம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபைச் செயலாளர், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, சமூக மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மைத் தமிழர் மகாசபை, கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகிய மக்கள் அமைப்புக்களின் பிரதிநிகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் க.செல்வம், மறவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் பரிபான சபைக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும் ஆலய திருவிழா உபயகார்களுக்கும் அறிவிப்பதெனவும், விரைவில் அனைவரையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை, மறவன்புலவு சச்சிதானந்தன் டிசம்பர் மாதம் 1941 ஆண்டு யாழ் மறவன்புலவுப் பிரதேசத்தில் பிறந்தார். எழுத்தாளரான இவர் ஐக்கிய நாடுகள் உணவு மையத்தின் ஆலோசகராகப் பதவி வகித்திருந்தார். சென்னை காந்தளகம் பதிப்பகத் தலைவராகவும் இருந்தார். பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழை ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக வெளியிட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 1977 முதல் 1979 வரையும், பதவி வகித்திருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் மத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தார்.