உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை-

நான்காவது நாளாக அத்துரலியே ரத்தன தேரரின் போராட்டம்

மைத்திரி கிஸ்புல்லாவுடன் நேற்றிரவு உரையாடல்- மகிந்த ரணில் சந்தித்துப் பேசியுள்ளனர்
பதிப்பு: 2019 ஜூன் 03 10:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 04 03:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவியில் இருந்து விலக்கமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று திங்கட்கிழமை நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில ஈடுபட்டு வரும் அத்துரலியே ரத்தன தேரரின் உடல் நிலை பலவீனமடைந்துள்ளதாக இன்று அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். கண்டியில் இன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சிங்கள வர்த்தகர்கள் அனைவரும் அத்துரலியே ரத்தன தேரருக்க ஆதரவு வழங்கியுள்ளனர்.
 
அதேவேளை, கண்டியில் அரச, தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் இன்று பணிக்குச் செல்லவில்லை. அத்துரலியே ரத்தன தேரர் சென்ற 31 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

தேரர்
கண்டி தலதாமாளிகைக்கு முன்பாக அத்துரலியே ரத்தன தேரர் இன்று திங்கட்கிழமை நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பெரும் திரளான சிங்கள பௌத்த மக்கள் இன்று கண்டி தலதாமாளிகைக்கு அருகில் ஒன்று கூடியுள்ளதைப் படத்தில் காணலாம். மைத்திரி. ரணில். மகிந்த உள்ளிட்ட முக்கியமான சிங்கள அரசியல் தலைவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்று திங்கட்கிழமையும் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை குற்றச்சாட்டுக்கள் இல்லாதநிலையில் காரணமின்றி எவருடைய கோரிக்கைக்கும் அடிபணிந்து பதவி விலகப் போவதில்லையென இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் கூறியுள்ளனர். ஏட்டிகுப் போட்டியான அரசியல் தற்போது இலங்கையில் சூடுபிடித்துள்ளது.

நீரை மாத்திரம் அருந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துரலியே ரத்தன தேரர், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த குருமார் தலதாமாளிகை வளாகத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிவற்றின் மூத்த உறுப்பினர்கள் அத்துரலியே ரத்தன தேரரரைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன. ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உரிய பதில் வழங்கவில்லையென்றால் அனைத்து பௌத்த குருமாரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பொது மன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

இதேவேளை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். ஸர்க்கான் ஹாசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஈழப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் உருவாக்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அததுடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளை மைத்திரி, ரணில். மகிந்த ஆகியோர் கூட்டாக இணைந்து பாதுகாத்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் மகிந்த ரணில் சந்திப்பில் முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

கிஸ்புல்லாவுடன் ஜனாதிபதி மைத்திரி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில் சந்தித்துப் பேசியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.