தமிழர் தாயகம் வடமாகாணம் - முல்லைத்தீவு

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்குமார் போராட்டம்

மூன்று பேருந்துகளில் பௌத்த சிங்கள மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்
பதிப்பு: 2019 ஜூன் 16 18:39
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 17 03:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Hindu
#Sinhalese
#GurukandaPuranaRajamahaViharaya
#Poson
#Neeraviyadipillaiyarkovil
வடமாகாணம் - முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் இலங்கைப் படையினரின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரையில், பௌத்த சிங்கள மக்கள் வெள்ளையுடைகளுடன் பொசன் பண்டிகைத் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர். அம்பாந்தோட்டை, மாத்தறை அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மூன்று பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட சுமார் இருநூறுக்கும் அதிகமான பௌத்த சிங்கள மக்கள் இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இலங்கைத் தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில், இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
 
இந்தப் பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயம் இருந்ததாக தமிழ் மக்கள் பொய் கூறுவதாக அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றிய பௌத்த பிக்குகள் கூறினர்.

முல்லைத்தீவு - நீராவியடியில் குருகந்த ரஜமஹா என்ற விகாரை பல நூற்றாண்டுகளாக இருந்ததாகவும், தற்போது தமிழ் மக்கள் அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளதால், இங்கு பௌத்த மக்கள் வழிபடமுடியாத நிலைமை உருவாகியுள்ளதாகவும் பெங்கமுவே நாலக்க தேரர் கூறியுள்ளார்.

அழைத்து வரப்பட்ட பௌத்த சிங்கள மக்களுக்கு இங்கு விகாரை கட்டப்பட்டமைக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாகவும் பிரதேச சபையின் அனுமதியின்றி விகாரை கட்டப்பட்டமை குறித்தும் பௌத்த பிக்குமார் எதுவுமே கூறவில்லை.

ஆனால் விகாரை பௌத்த மக்களுக்குரியதெனக் கூறி பொய்யான பரப்புரைகளையும் தமிழ் மக்களுக்கெதிரான இனவாதக் கருத்துக்களையும் பிக்குமார் விதைத்தாகப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டனர்.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் சைவத் தமிழ் மக்களும் பௌத்த மக்களும் வழிபாடுகளில் ஈடுபட முடியுமென முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று சென்ற மே மாதம் ஆறாம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

அத்துடன் விகாரையின் பெயர் நீக்கப்பட்டு நீராவியடிப் பிள்ளையாரெனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பெருமளவு மக்களை அழைத்து வந்து தவறான பிரசாரங்களில் பௌத்த குருமார் ஈடுபடுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விகாரையின் பெயர் நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அழைத்து வரப்பட்ட பௌத்த சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். பௌத்த பிக்குமாரின் இந்தச் செயற்பாட்டுக்கு இலங்கை இராணுவத்தினர் சிவில் உடைகளில் நின்று உதவியளித்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள விகாரையை இடிக்க வேண்டுமென்றும் அங்கு பிள்ளையார் ஆலயம் மாத்திரமே இருந்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை இராணுவத்தின் உதவியுடன் கட்டப்பட்ட விகாரையின் பெயர் நீக்கம் செய்யப்பட்டமைக்கு வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியமை பௌத்த பேரினவாதச் செயற்பாடெனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றத்திலும் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் கூறுகின்றனர்.