அமெரிக்க- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்-

அமெரிக்காவுக்கும் நெருக்குதலா? பொம்பேயோவின் வருகை ரத்து

திருகோணமலைக்கும் செல்லவிருந்தார்
பதிப்பு: 2019 ஜூன் 19 16:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 03:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையுடன் செய்யவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாக கலந்துரையாடி வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ, (US Secretary of State Mike Pompeo) கொழும்புக்கு பயணம் செய்வாரென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத நெருக்கடிகளினால் பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ஆபத்தானதென்று மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றுச் செய்வ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். மகாநாயக்கத் தேரர்களும் சோபா ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
 
ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோவும் செல்கிறார்.

அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகவே அவர் கொழும்புக்கும் வருகை தருவாரென அமெரிக்கத் தூதரகம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்து-பசுபிக் பிராந்தியத்துக்கான பயணத்தின்போது பிராந்திய ஒத்துழைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையில் பொம்பேயோ கலந்துரையாடவிருந்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணம் திருகோணமலைத் துறைமுகத்திற்கும் சென்று இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடனும் கலந்துரையாடவிருந்தார். இந்த நிலையில் பொம்பேயோவின் இலங்கைப் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பொம்பேயோவின் வருகைக்கு ஜே.வி.பியும் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. அமெரிக்கப் படைகளை இலங்கைக்குள் கொண்டு வருதல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில், அமெரிக்காவின் சோபா உடன்படிக்கை அமையவுள்ளதாக ஜே.வி.வி ஏலவே குற்றம் சுமத்தியிருந்தது.

இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் இறைமை, தன்னாதிக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படாத விகையிலேயே சோபா பாதுகாப்பு ஒப்பந்தம் அமையுமென கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கண்டிக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களிடம் உறுதியளித்திருந்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் (R. Clarke Cooper) கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்து சென்றிருந்தார்.