பௌத்த பேரினவாதிகளின் அழுத்தங்களினால் கூட்டாகப் பதவி விலகிய ஒன்பது முஸ்லிம்களில் இருவர்

அமைச்சர்களாகப் பதவியேற்பு- ரணிலின் பிரித்தாளும் தந்திரம்!

ரிஷாட் பதியுதீனதை் தவிர்த்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க முடியாது- ரவூப் ஹக்கீம்
பதிப்பு: 2019 ஜூன் 19 23:02
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 03:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத் தீவில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளினால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும், இலங்கை இராணுவச் சோதனைக் கெடுபிடிகளுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இருந்து ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாகத் தமது பதவிகளில் இருந்து விலகினர். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ஹபீர் காசிம், கட்சியின் மூத்த உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகிய இருவரும் இன்று புதன்கிழமை மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். கட்சி வேறுபாடுகளின்றி சமுகத்தின் பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தவே கூட்டாக அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் மீண்டும் கூடடாகவே அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

ஒன்பது பேரும் கூட்டாகப் பதவி விலகிய சில வாரங்களில் இருவர் மாத்திரம் அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்பது, முஸ்லிம்களைப் பிரித்தாளும் தந்திரமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

ஆனாலும் அவசர அவசரமாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு இன்று அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

குற்றச்சாட்டுக்குள்ளான ரிஷரட் பதியுதீன் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க முடியாத நிலையுள்ளது. மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அதனை விரும்பவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்க முடியுமென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அதனை மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக்கொண்டுள்ளார். பௌத்த மகாநாயக்கத் தேரர்களும் அதற்கு விரும்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ரிஷாட் பதியுதீனைத் தவிர்த்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க முடியாதென ரவூப் ஹக்கீம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பது தொடர்பாக ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அமைச்சர்களாக இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்ட ஹபீர் காசிம், அப்துல் ஹலீம் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டாகப் பதவி விலகியது போன்று கூட்டாகவே அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதெனவும், பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் தந்திரோபாயங்களைப் புறந்தள்ளி ஒருமித்த முஸ்லிம் சமுகமாகச் சிந்திக்க வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இன்று முற்பகல் ஹபீர் காசிம், அப்துல் ஹலீம் ஆகிய இருவரும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். எனினும் பௌத்த பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு மத்தியில் நிதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.