கிழக்கு மாகாணம் அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேசச் செயலகத்தை தரமுயர்த்தும் போராட்டம்

உண்ணாவிரதத்தைக் கைவிட்ட பிக்கு மீண்டும் போராட்டம்

பிக்குமாரின் உள்நோக்கங்களை கண்டிக்கத் தவறிய தமிழ்க் கட்சிகள்
பதிப்பு: 2019 ஜூன் 22 22:27
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 15:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர்க்காலத்தில் இலங்கை இராணுவப் புலானாய்வோடு சேர்ந்து இயங்கிய பொதுபலசேனவின் செயலாளர் அத்தே ஞானசார தேரரின் உறுதிமொழிக்கு அமைவாக கல்முனையில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று சனிக்கிழமை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசச் செயலகமாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஒரு மாதத்துக்குள் தரமுயர்த்தப்படும் என ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கினார். ஆனாலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், நீரை மட்டும் அருந்தி தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
 
கடந்த ஆறு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஏனையவர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வடக்கு- கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசத்தையும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டையும் சிதைக்கும் நோக்கில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் இலங்கைப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகள் மூலமாகவே, கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் உறவுக்கு அரசியல் ரீதியான தடைகளை உருவாக்கி வந்ததது

கல்முனைக்குச் சென்ற பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மகா சங்கத்தைச் சேர்ந்த பௌத்த குருமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உரையாடினர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தலைவர் சிவசிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெட்ணம் ஆகிய நால்வரும் தமது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். தற்போது வைத்தியசாலைக்கு கொண்டுள்ளனர்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசச் செயலகமாகத் தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. ஆனால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பிரச்சினைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்வைப் பெற்றுத்தரவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தினர்.

மக்களின் இந்த இயல்பான எழுச்சியின்போது, பௌத்த குருமாரும் வேறு சில அமைப்புகளும் தாமகவே வந்து ஆதரவு வழங்கியதாகவும் எனினும் பௌத்த பேரினவாதப் பிக்குமார் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதால், தமிழ் முஸ்லிம் மக்களை நேரடியாகவே மோத விடுவதற்கான தந்திரோபாயமெனவும் விமர்சனங்கள் எழுந்தன.

தமிழ் மக்களின் போராட்டத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களுடனான மோதலாகத் தூண்ட முற்பட்ட பௌத்த பிக்குமாரின் செயற்பாடுகளை, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்க் கட்சிகள். தமிழ்ப் பிரமுகர்கள் பலரும், கண்டிக்கவேயில்லையென பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மகிந்த ராஜபக்சவிக்கு நெருக்கமானவரெனவும். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தபோது கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது இடம்பெற்ற இனமோதல்களுக்கு காரணமாகச் செயற்பட்டவரெனவும் அம்பாறை மக்கள் கூறுகின்றனர்.

வடக்கு- கிழக்கு இணைந்த தாயகப் பிரதேசத்தையும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டையும் சிதைக்கும் நோக்கில், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் இலங்கைப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகள் மூலமாகவே, கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் உறவுக்கு அரசியல் ரீதியான தடைகளை உருவாக்கி வந்ததது.

அத்தோடு, கிழக்கில் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், முழுமையான அதிகாரங்களை வழங்கிச் சுதந்திரமாச் செயற்படுவதற்கான சலுகைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியிருந்ததாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, ஞானசார தேரரின் உறுதிமொழியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், வைத்தியசாலையில் இருந்து திரும்பி மீண்டும் இன்றிரவு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை கல்முனைக்குச் செல்லவுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மற்றும் முன்னாள் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்னாள் உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோரும் கல்முனைக்குச் சென்று ஆதரவு வழங்கியிருந்தனர்.