உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழலில் முஸ்லிம்களின் பாதுகாப்பு?

இந்திய- இலங்கை புலனாய்வுத் துறையின் இணைந்த செயற்பாடுகள்

ஐஎஸ் தாக்குதல்களைத் தடுக்க இருநாடுகளும் ஏற்பாடு என்கிறார் இலங்கை இராணுவத் தளபதி
பதிப்பு: 2019 ஜூன் 24 10:17
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 25 02:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைக்கு வந்து சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் தங்கியிருந்த நான்கு மணி நேரத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்த நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கவில்லையென்ற குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. நரேந்திர மோடியிடம் இயல்பாகவே முஸ்லிம் எதிர்ப்பு உள்ளதென்ற கருத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிற்றுத் தாக்குதலின் பின்னரான சூழலில் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் சந்தேகிக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக இந்தியப் புலனாய்வுடன் சேர்த்து செயற்பட்டு வருவாக இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கா கூறியுள்ளார்.
 
மாதுருஓயா இராணுவ முகாமில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய- இலங்கை நாடுகளின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள், நெருக்குதல்கள் ஏற்படலாம். அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மஹேஸ் சேனாநாயக்கா கூறினார்.

புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் புலனாய்வுத் துறையினருடன் இணைந்து செயற்படுவதால், ஐ.எஸ் அடிப்படைவாதிகளின் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளை தடுக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம்களின் பாதுகாப்பு போதியளவு உறுதிப்படுத்தப்படவில்லையெனவும், சந்தேகத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவதாகவும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஐ.எஸ் தாக்குதல்களைத் தடுக்க இந்திய- இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இணைந்து செயற்படுவது வரவேற்கக் கூடியதுதான். ஆனாலும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்குரியதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.

பௌத்த பிக்குமாரின் அழுத்தங்களினால் ரணில் விக்கிரமசிங் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து ஒன்பது முஸ்லிம் உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விலகினர்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர் சென்ற ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.