அமெரிக்க - இலங்கை

பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு மகிந்த தரப்பும் எதிர்ப்பு?

இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்கிறார் ரணில்
பதிப்பு: 2019 ஜூன் 24 22:56
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 24 14:44
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Politicalsituation
#Mahindarajapaksha
#Maithripalasrisena
#Ranilwickramasinghe
#US
#SOFAAgreement
அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் மகிந்த அமரவீர கூறியுள்ளார். இலங்கையின் இறைமைக்கும் ஒற்றையாட்சிக்கும் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆபத்தானதென்றும் மகிந்த அமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தை எதிர்க்கவுள்ள அனைத்துத் தரப்புடனும் கைகோர்த்துச் செயற்படத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க இராணுவத் தளங்களை இலங்கையில் அமைப்பதற்கு அனுமதிக்க முடியாதெனவும் மகிந்த அமரவீர கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, மகிந்த ராஜபக்சவுடன் இரண்டு தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்சவோ அல்லது அவருடைய சகோதரர், கோட்டாபய ராஜபக்சவோ இதுவரை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை.

ஆனால் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் கட்சியின் வேறு உறுப்பினர்களை அமெரிக்காவுக்கு எதிராகப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் மகிந்த ராஜபக்ச என்று ஐக்கிய தேசியக் கட்சி ஏலவே குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவோடு உடன்படிக்கை ஒன்று மகிந்த ராஜபக்சவின் பதவிக் காலத்தில் 2007 ஆம் ஆண்டு செய்யப்பட்டதாகவும் 2017 ஆண்டுடன் அந்த ஒப்பந்தம் காலவதியாகிவிட்டதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அந்த அடிப்படையிலேயே தற்போது அந்த புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்யவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

சோபா எனப்படும் ஒப்பந்தத்தின் பிரதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க சென்ற நாடாளுமன்ற அமர்வில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.