இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பிரகாரம்

மாகாண சபைத் தேர்தல்? சட்டச் சிக்கல் என்கிறார் தேசப்பிரிய

மாகாண சபை முறையைக் கைவிட பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் திட்டம்
பதிப்பு: 2019 ஜூன் 25 23:17
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 28 22:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#ProvincialCouncilElection
#JVP
#MahindaDesapiriya
#lka
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இந்த ஆண்டு யூன் மாதம் மாகாண சபைகளுக்காக தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஆண்டின் இறுதியில் கூட நடத்த வாய்ப்புள்ளது. எனினும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பெரும் சட்டச் சிக்கல் ஒன்றை அரசாங்கம் எதிர்கோக்க நேரிடுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த சேப்பிரிய மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஏலவே கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லையானால் ஆணைக்குழுவின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை முதலில் நடத்தாமல், ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த முடியாதென்றும், 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அது பாரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்துமெனவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான கடமை. அப்படி இல்லையேல் தேர்தல்கள் ஆணைக்குழுவை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவெனக் கூற முடியாதெனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய கடமையாற்றுக்கினார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடத்தப்படாமல், மாகாண சபைகள் முறையை அப்படியே கைவிடுவதென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் ஆலோசித்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ஜே.வி.பி போன்ற சிறிய சிங்களக் கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடுவதாகவும், எனினும் மாகாண சபை முறையைக் கைவிடுவதால், ஏற்படவுள்ள நன்மைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இணைந்த வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான மாகாண சபை முறை ஊடாக நிறுவுவதற்கு தமிழ்க் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

அத்துடன், ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலவும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரங்களை முழுமையாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதால், மாகாண சபைகள் முறையை கைவிட வேண்டுமெனவும் அதனால் சிங்கள மக்களுக்குப் பதிப்புகள் இல்லையெனவும் ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மாகாண சபைகளைக் கைவிடக்கூடிய வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் மைத்திரி, ரணில், மகிந்த, சந்திரிகா உட்பட சிங்கள அரசியல் கட்சிகளின் பிரதான தலைவர்கள் அதற்கு உட்பட்டுள்ளனரென்றும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவே மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாகவும் அதற்கு ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.