வடமாகாணம் - முல்லைத்தீவு அம்பாள்புரம் ஆறாம் கட்டை, கொல்லவிளாங்குளத்தில் போக்குவரத்துப் பிரச்சினை

பதினெட்டுக் கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

மைத்திரியின் உத்தரவும் மீறப்பட்ட நிலை
பதிப்பு: 2019 ஜூலை 01 16:41
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 10:26
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Northernprovince
#Mullaituvu
#Publictransport
#Maithripalasrisena
#Lastwar
#Vanni
தமிழர் தாயகம் வடமாகாணம் - முல்லைத்தீவு அம்பாள்புரம் ஆறாம் கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் பொது மக்களும் பாடசாலை மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு - மாந்தை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் பாடசாலைக்குச் செல்வதற்காகப் பதினெட்டுக் கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்வதாகப் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் பலர் வன்னிவிளாங்குளம், மாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று கல்வியைத் தொடருகின்றனர்.
 
அதுவும் ஒன்பது கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து செல்வதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். இந்தப் பிரதேச மக்களின் போக்குவரத்துத் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஒற்றையாட்சியின் அதிபர் மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு கடந்த மாசி மாதம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஒழுங்கு செய்யப்பட்ட போக்குவரத்துக்கள் சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதி மக்கள் மீண்டும் போக்குவரத்துப் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகக் கூறுகின்றனர்.

மைத்திரியின் உத்தரவை அடுத்து ஒழங்கு செய்யப்பட்ட போக்குவரத்துக்கள் திடீரென நிறுத்தப்பட்டமைக்கான காரணங்கள் எதுவுமே தெரியவில்லை என்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு - அம்பாள்புரம் ஆறாம் கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அதிகாரிகள் எவரும் பார்வையிடுவதில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

போரின் போது இடம்பெயர்ந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டாலும் அவர்களுக்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கைப் படையினர் சென்று வரக்கூடியவாறு பிரதான வீதிகள் அகலமாக்கப்பட்டு தரைவிரிப்பு தார் போடப்பட்டுள்ளது. ஆனால் உட்புறக் கிராமங்களுக்குச் செல்லும் வீதிகள் செப்பனிடப்படவில்லை. அந்தக் கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளும் இல்லையென சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.