உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு சமுகமளிக்கத் தவறிய குற்றச்சாட்டில்

ஹேமசிறி பெர்ணாண்டோ, பூஜித ஜயசுந்தர கைது

மைத்திரிபால சிறிசேன தனது தவறை மூடிமறைக்க முற்படுவதாக ரணில் தரப்பு குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜூலை 02 21:54
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 06 14:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EastersundatAttack
#Srilanka
#lka
#Colombo
#Police
#HemasiriFernando
#PujithJayasundara
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இந்தியப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அதிகாரபூர்மாகத் தகவல் கிடைத்திருந்தும் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பான விசாரணைகளுக்குச் சமூகமளிக்காத குற்றத்திற்காக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் (CID) பிரிவினரால் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி விலக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்ணாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பூஜித ஜயசுந்தர ஆகியோர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த நிலையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் கைதானதாக இலங்கைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளரர்.

கொழும்பு - பொரளையிலுள்ள தேசிய வைத்தியசாலையில் வைத்து ஹேமசிறி பெர்ணாண்டோவும், கொழும்பு நாரஹேன்பிட்டியவிலுள்ள காவல் துறையினரின் வைத்தியசாலையில் வைத்து பூஜித் ஜயசுந்தரவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகக் கொழும்பில் உள்ள இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருமாறு இருவருக்கும் நேற்றுத் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இருவரும் இன்று காலை விசாரணைக்குச் செல்லவில்லை. மாறாக இருவரும் வெவ்வேறு வைத்தியசாலைகளில் திடீரென அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இலங்கையின் பதில் காவல் துறை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள சந்தன விக்கிரமரத்னவுக்கு இலங்கைச் சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா நேற்றுத் திங்கட்கிழமை அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இருவரும் இன்று பிற்பகல் கைதாகியுள்ளனர்.

கைதான இருவரும் இலங்கைக் காவல் துறையின் மேற்பார்வையில் அந்தந்த வைத்­தி­ய­சா­லை­க­ளி­லேயே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­வ­தாக காவல்துறைப் பேச்­சாளரும் காவல்துறை அத்­தி­யட்சகருமான ருவன் குண­சே­கர கூறியுள்ளார்.

கொழும்பு பிர­தான நீதவான் நீதிமன்றத்திற்கு இலங்கை உதவிக் காவல் துறை அத்தியட்சகர் ஒருவர் இன்று அறிக்கை சமர்ப்­பித்திருந்தார். இன்று மாலை கொழும்பு பிர­தான நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்க ஜய­ரத்ன கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கும், நார­ஹேன்­பிட்டி காவல்துறையின் வைத்தியசாலைக்கும் சென்று இருவரையும் பார்வையிட்டார்.

அதன் பின்னர் இருவரையும் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டதுடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற அனுமதிக்குமாறும் பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் பணித்தார்.

இதேவேளை, தன்மீதான குற்றத்தை மூடிமறைப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன இருவரையும் கைதுசெய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குறைகூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடு்ப்பதற்கான உத்தரவுகளை மைத்திரிபால சிறிசேன இலங்கைப் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் உதாசீனம் செய்ததாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து கடந்த வாரம் விலகிய, சிசர மென்டிஸ், இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

ஹேமசிறி பெர்ணாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது தேவையற்ற முறையில் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை இலங்கை முப்படைகளின் தளபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேனவே தடுத்திருக்க வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.