இலங்கையின் ஒற்றையாட்சி, இறைமைக்குப் பாதிப்பு ஏற்படாத நிலையில்

அமெரிக்காவோடு ஒப்பந்தம் - மகிந்த இரு குழுக்களை நியமித்தார்

மகிந்த அணியைச் சேர்ந்தவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா
பதிப்பு: 2019 ஜூலை 03 10:44
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 05 03:34
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Mahindarajapaksha
#SOFAAgreement
#Government
அமெரிக்காவுடன் செய்யவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா விளக்கமளித்து வருகின்றார். குறிப்பாக பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வருகின்றார். ஆனாலும் எதிர்ப்புகள் தொடருகின்றன. அமெரிக்காவுடன் செய்யவுள்ள ஒப்பந்தத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே கண்டித்துள்ளார். கடந்த சில வாரங்களாக முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவைத் தொடர்ச்சியாகவே சந்தித்து வரும் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென உறுதியளித்துள்ளார்.
 
இந்த நிலையில் அமெரிக்காவுடன் செய்யவுள்ள சோபா ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, இரண்டு குழுக்களை மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.

கண்டி மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இரண்டு குழுக்களையும் மகிந்த ராஜபக்ச அமைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் முதலாவது குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உறவுகள் மற்றும் கொள்கைசார் நிபுணர்கள் நான்கு பேர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

சோபா ஒப்பந்தத்தினால் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக இலங்கைக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் தொடர்பாக இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

இரண்டாவது குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூன்று பேர் இடம் பெறுகின்றனர். இந்த மூன்று சட்டத்தரணிகளும் சோபா ஒப்பந்தத்தினால் இலங்கைச் சட்டத்துறையில் ஏற்படக் கூடிய தாக்கங்களை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

நாளை வியாழக்கிழமை மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ள இந்த இரண்டு குழுக்களின் பிரதிநிதிகளும குறிப்பிட்ட சில வாரங்களில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பர் என கூறப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது 2007 ஆம் ஆண்டு அஷ்கா (acsa) எனப்படும் எட்டுப் பக்கங்களைக் கொண்ட ஆரம்ப ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் பதவியில் இருக்கும்போது காலவதியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே சோபா எனப்படும் விரிவான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்வது குறித்து அமெரிக்கா இலங்கையோடு கலந்துரையாடி வருகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிரதமராக நியமித்தார். இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளராக மேஹசிறி பெர்ணாண்டோவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

அடுத்த சில வாரங்களில் ஹேமசிறி பெர்ணாண்டோவைச் சந்தித்து சோபா ஒப்பந்தத்தை தயாரிப்பது தொடர்பாக கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.

தற்போது மகிந்த ராஜபக்சவின் அணியைச் சேர்ந்த ஒருவரே நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக மீண்டும் பதவிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இவ்வாறான அணுகுமுறைகளில் ஈடுபடுவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.