தமிழ் பேசும் மக்களின் தாயகம் கிழக்கு மாகாணம் திருகோணமலையில்

ஐந்து மாணவர் கொலை- ஆதாரமில்லையென நீதிமன்றம் தீர்ப்பு

பதின்மூன்று இலங்கைக் கடற்படையினரும் விடுதலை
பதிப்பு: 2019 ஜூலை 03 16:55
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 07 14:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலை கடற்கரைப் பிரதேசத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்த ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைதான இலங்கை விசேட அதிரடிப்படையினர் பன்னிரெண்டுபேர் உள்ளிட்ட பதின்மூன்று சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையென திருகோணமலை பிரதான நீதவான் முகமட் ஹம்சா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பதின்மூன்று பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதவான் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
 
2006 தை மாதம் இரண்டாம் திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்களை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் நேரடிச் சாட்சியங்களின் அடிப்படையில் இலங்கைப் படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மனோகரன் ரஜீகரன், யோகராஜா ஹேமசந்திரன், லோகித ராஜா ரோகன், தங்கதுரை சிவநாதன், சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய 21 வயதுடைய மாணவர்களே இலங்கைப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்ப்பார்த்திருந்த நிலையில் திருகோணமலைக் கடற்கரையில் இலங்கைப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஐந்தாம் திகதி, பன்னிரெண்டு விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பதின்மூன்றுபேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான சந்தேகநபர்களை ஆவணி மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டிருந்தது.

பின்னர் கைதான அனைவரும் 2013 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே இன்று புதன்கிழமை பதின்மூன்று பேரும் நிரபராதிகள் எனவும் குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லையெனவும் கூறப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர் வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

கொல்லப்பட்ட ரஜீகரன் என்ற மாணவனின் தந்தையரான வைத்தியக் கலாநிதி மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.

சர்வதேச மனித உரிமைகள் காப்பகம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் இவருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அப்போது கோரியுமிருந்தன. மனோகரன் ஜெனீவா மனித உரிமைச் சபையிலும் சாட்சியங்களை வழங்கியிருந்தார்.

இலங்கைப் படையினரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான ஆதாரமாக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் சடலங்களைப் படமெடுத்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன், இலங்கைப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.