இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்

ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் புதிய அரசியல் கூட்டணி

வடக்கு கிழக்கை மையப்படுத்தி ஈடுபடவுள்ளதாகவும் அறிவிப்பு
பதிப்பு: 2019 ஜூலை 11 16:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 12 02:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு கிழக்கு, மாகாணங்களையும் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாணம் மற்றும் மலையகம் ஆகியவற்றை உள்ளடக்கி பிரதேச வேறுபாடுகள் இன்றி புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது. மலையகத் தமிழர்களின் அரசியல் மற்றும் தொழிற் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பழம்பெரும் கட்சியான தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஏனையவர்களோடு சேர்ந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்ற உடன்பாட்டில், இதற்கான ஒப்பந்தங்களும் ஏனைய சிறிய கட்சிகளோடு கைச்சாத்திடப்பட்டுள்ளன.
 
நுவரேலியா, கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய அரசியல் கூட்டணியில் யார் தலைவர், யார் பொதுச் செயலாளர் என்ற பேச்சு்க்கு இடமேயில்லையென முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை அரசியலின் எதிர்காலத் தேவை கருதி பிரதேச வேபாடுகள் இன்றி புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் பல கட்சிகள் இணைந்தவுடன் அரசியல் செயற்பாடுகள் பற்றி அறிவிக்கப்படுமெனவும் ஆறுமுகன் தொண்டமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியும் புதிய அரசியல் கூட்டணியில் கட்சிகள் இணைக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் சன் குகவரதன் தலைமையிலான தமிழர் ஐக்கிய இணையமும் இணைந்து செயற்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேவேளை, புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இதுவரை பேசப்படவில்லையென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய கூட்டணியில் இணைந்து செயற்படுமாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.