உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் எதிரொலி- நம்பிக்கையில்லாப் பிரேரணை

ரணில் எழுத்தில் உத்தரவாதம்? சம்பந்தன் பகிரங்கப்படுத்தவில்லை

கன்னியா பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்றத்தில்
பதிப்பு: 2019 ஜூலை 11 23:22
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 12 02:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசில் பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. தமிழரசுக் கட்சியை தலைமையாகக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததாலேயே ரணில் அரசாங்கம் காப்பாற்றப்பட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியுள்ளார். ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வாக்கெடுப்பு நடைபெற்றவேளை இவர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
 
எனவே இவர்கள் வாக்களிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்தாலும், ஜே.பி.வி இந்தப் பிரேரணையை வென்றிருக்க முடியாதென கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒப்பாசாரத்துக்கேனும் அதிருப்பதியை வெளிப்படுத்த, அதுவும் அமைச்சராக இருந்துகொண்டே மனோ கணேசன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையை விட்டு வெளியேறினார்

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பியினால் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றுப் புதன்கிழமை ஆரம்பமாகி இன்று வியாழக்கிழமை மாலை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மகிந்த ராஜபக்ச தரப்பு உள்ளிட்ட சில கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

மகிந்த ராஜபக்சவின் ஆதரவுக் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும், மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அரசாங்கத்தரப்புடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

இதனால் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் பெறப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு 1965 ஆம் ஆண்டு ஆதரவு வழங்கிப் பின்னர் ஏமாந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சிக்குத் தாராளமாக இருந்தும், இத்தனை ஆண்டுகளின் பின்னரான சூழலிலும் அந்தக் கட்சியை நம்புகின்ற பண்பு இன்னமும் மாறவில்லையென அவதானிகள் கூறுகின்றனர்

வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை.

எதிர்க்கட்சி வரிசையிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் ஆகியோரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதால் அதற்குப் பொறுப்பேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என பிரேரணையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் நல்லிணக்கம் என்ற பெயரில் மேற்கொண்டு வரும் நில அபகரிப்புகள், விகாரைகள் கட்டுவது போன்ற அத்துமீறல் செயற்பாடுகள் பற்றி விரிவாகப் பேசவில்லையென்றும், கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

பிரேரணைக்கு எதிராக கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலமான உத்தரவாதம் வழங்கியதாக சம்பந்தன் கூறுகின்றார். ஆனால் அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் எதையுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தவில்லை.

திருகோணமலை கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டு விகாரை கட்டுவதற்கான ஏற்பாடுகளை பௌத்த பிக்குகள் இன்று வியாழக்கிழமை திடீரெனத் தீவிரமாக மேற்கொண்டிருந்த வேளையில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒப்பாசாரத்துக்கேனும் அதிருப்தியை வெளிப்படுத்த அதுவும் அமைச்சராக இருந்துகொண்டே மனோ கணேசன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு 1965 ஆம் ஆண்டு ஆதரவு வழங்கிப் பின்னர் ஏமாந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சிக்குத் தாராளமாக இருந்தும், இத்தனை ஆண்டுகளின் பின்னரான சூழலிலும் அந்தக் கட்சியை நம்புகின்ற பண்பு இன்னமும் மாறவில்லையென அவதானிகள் கூறுகின்றனர்.