உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான அழுத்தங்களினால் பதவிகளை இழந்த

முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பர்

மைத்திரி- ரணில் இணக்கம்- மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சிலா் கடும் எதிர்ப்பு
பதிப்பு: 2019 ஜூலை 12 23:22
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 13 00:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கண்டி மகாநாயக்கத் தேரர்கள், பௌத்த பிக்குமார் ஆகியோரின் கடுமையான அழுத்தங்களையடுத்து அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள், மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளனர். இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பாக முஸ்லிம் உறுப்பினர்களோடு உரையாடியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம் பிரதிநிதிகளோடு உரையாடி அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் முன்னர் வகித்திருந்த அதே அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதென முஸ்லிம் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
 
ஆனால், தற்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுக்குள்ளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரெனவும் பைசல் காசிம் தெரிவித்தார்.

இதேவேளை, ரிசாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை ஏற்க முடியாதென மகிந்த தரப்பு உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனால் மகிந்த ராஜபக்ச ரிசாட் பதியுதீன் தொடர்பாக எதுவுமே கூறவில்லை.

ரிசாட் பதியுதீனின் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லையென்றால் அவர் அமைச்சுப் பதவியை ஏற்பதில் தவறில்லையென மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் ஏலவே கூறியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் ரிசாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை மீண்டும் ஏற்பதை விரும்பவில்லையென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் பதவி விலகிய அடுத்த வாரமே மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். இதேவேளை. முஸ்லிம்களின் பாதுகாப்பு சரியான முறையில் உறுதிப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுள்ளது.

ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து கடந்த மே மாதம் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.