இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்ட

தேவதாசன் மகசீன் சிறையில் உண்ணாவிரதம்

ஆயுள் தன்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதிக்குமாறு கோரியுள்ளார்
பதிப்பு: 2019 ஜூலை 15 19:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 19:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இடதுசாரி இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு தமிழ் அரசியலை முன்னெடுத்தவரும், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கனகசபை தேவதாசன், இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். 62 வயதுடைய தமிழ் அரசியல் கைதியான தேவதாசன், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள்த் தன்டனைக்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு வசதியளிக்குமாறு கோரியே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
 
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் கைது செய்யப்பட்ட தேவதாசனுக்கு 2017 ஆம் ஆண்டு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆயுள் தன்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.

தனக்காக வாதாட சட்டத்தரணிகள் எவரையும் தேவதாசன் அப்போது அனுமதித்திருக்கவில்லை. மாறாக தேவதாசனே தனக்காக நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார்.

தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காகச் சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்ல நீதிமன்றம் அனுமதிக்கவில்லையென்றும், அது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியெனவும் தேவதாசன் கூறுவதாக சக அரசியல் கைதிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

மேன் முறையீடு செய்வதற்கு கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணியின்றி மனு ஒன்றைத் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு கோரி இலங்கை நீதியமைச்சுக்குத் தேவதாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லையென தேவதாசன் கூறுகின்றார்.

இதேவேளை. உண்ணாவிரதம் இருக்க வேண்டாமென சிறைச்சாலை அதிகாரிகள் தேவதாசனை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் தேவதாசன் உண்ணாவிரதத்தை தொடருகின்றார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையக் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டே தேவதாசன் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த தேவதாசன் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஜே.வி.பியுடன் இணைந்து கொழும்பில் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். தேவதாசன் சிங்கள மொழியில் சிறந்த பரீட்சயமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.