இலங்கை நாடாளுமன்றத்தில்

மைத்திரிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி திட்டம்
பதிப்பு: 2019 ஜூலை 18 05:36
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 18 11:14
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியமை, 19 ஆவது அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்படுகின்றமை போன்ற பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுக்கள் பிரேரணையில் முன்வைக்கப்படுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன. பிரேரணையில் உள்ளடக்கப்படவுள்ள குற்றங்கள் குறித்த சட்ட வியாக்கியானங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட வல்லுநர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
 
ஜனாதிபதிக்கெதிராக அரசியல் குற்றப் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அதற்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து தடுக்க முடியும்.

ஆனாலும் நாடாளுமன்றமே அதி உயர் அதிகாரம் கொண்டது என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீது விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விடமுடியுமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், ஜனாதிபதி மீதான அரசியல் குற்றப் பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆகக் குறைந்தது 120 வாக்குகளை மாத்திரமே பெறமுடியும்.

அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 150 வாக்குகளைப் பெறுவதற்குத் மேலும் 30 வாக்குகளைப் பெறும் நோக்கில், ஜே.வி.பி மற்றும் மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர்களோடு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.