இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே அமெரிக்காவுடன் சோபா ஒப்பந்தம் கைச்சாத்தாகும்!

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

சஜித் பிரேமதாசாவை இதுவரை சந்திக்கவில்லை
பதிப்பு: 2019 ஜூலை 24 13:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 29 13:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#sofa
#agreement
#அமெரிக்க
#ஒப்பந்தம்
இலங்கையோடு அமெரிக்கா "சோபா" எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு கொழும்பில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் எதிர்ப்பு வெளியிடும் தரப்புகளைச் சந்தித்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச நேரடியாக எதிர்ப்பு வெளியிடவில்லை. ஆனால் அவரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவான விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புகளை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் சோபா உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
 
கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற மூன்றவாது சந்திப்பு இதுவாகும். அமெரிக்கத் தூதரகத்தின் ஏற்பாட்டிலேயே செவ்வாய்க்கிழமை சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தரப்பில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

சிகிச்சைக்காகச் சிங்கப்பூருக்குச் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, இன்று புதன்கிழமை அதிகாலை கொழும்புக்குத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்திருந்த அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆராய்ந்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கும் எதிர்ப்புகள் பற்றியும் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சந்திப்பில் மகிந்த ராஜபக்சவுடன், ஸ்ரீலங்கா கொதுஜன பெரமுனக் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல ஆகியோரும் பங்குபற்றினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எதுவும் கூறவில்லை. மகிந்த ராஜபக்ச தரப்பும் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனாலும் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, மகிந்தவைத் தேடி வந்து சந்திதாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் சந்தித்துப் பேச வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்றுச் செய்வாய்க்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் ஆபத்தானவை என்றும் இதனால் மைத்திரியும் மகிந்தவும் சந்தித்துப் பேச வேண்டியது அவசியமென்றும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக ஏற்க முடியாதென மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதே கருத்தை மகிந்தவுக்குச் சார்பான வேறு பல உறுப்பினர்களும் ஏலவே கூறியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் ஏழாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடைபெறுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ள நிலையில், பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போட்டிகள் அதிரித்துள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இலங்கையோடு செய்யப்படவுள்ள சோபா ஒப்பந்தம் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னரே கைச்சாத்திடப்படுமென கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவாரென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இதுவரை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் சஜித் பிரேமதாசாவைச் சந்திக்கவில்லை.

ஆனால் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்தால், அமெரிக்காவுடன் சேர்ந்து சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவாரெனவும் ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்க, இந்திய உறவைப் பலப்படுத்தி வரும் கட்சியெனவும் மகிந்த ராஜபக்ச தரப்பில் உள்ள வேறு சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா கண்டிக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களையும் சந்தித்து விளக்கமளித்திருந்தார்.