வடமாகாணம் - மன்னார்

மடு தேவாலயப் பெருநாளுக்கு மக்களின் வருகையில் வீழ்ச்சி

ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மற்றுமொரு பெருநாள்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 02 21:00
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 02:32
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#ShrineofOurLadyofMadhu
#annualfeat
#tamils
#sinhalese
#srilanka
#lka
#Eastersundayattack
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
 
ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ ஆலயங்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து நடாத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்தே மடுமாதா ஆலயப் பெருநாளுக்கு மக்களின் வருகை குறைந்துள்ளது.

அத்துடன் பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களையும் இலங்கைப் படையினர் சோதனையிட்டனர்.

இதன் காரணமாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாமென மடுமாதா ஆலய அருட்தந்தையொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சுமார் நான்கு இலட்சம் மக்கள் மடு தேவாலயப் பெருநாளுக்கு வருகை தந்தனர். ஆனால் இம்முறை இருபத்து நான்காயிரத்து அறுநூறு பேர் மாத்திரமே வருகை தந்ததாகவும் அந்த அருட்தந்தை கூறினார்.

போர்க் காலத்தில் கூட கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து அதிகளவு மக்கள் மடு ஆலயப் பெருநாளுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மக்கள் மடுவுக்கு வருகைதர அஞ்சுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி மடுத்திருப்பதியின் மேலும் ஒரு திருவிழா நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.