தமிழர் தாயகம் - வடமாகாணம்

வவுனியாவில் மூன்று கிராம மக்கள் ஒருவேளை உணவுக்குப் பெரும் அவதி

மாணவர்களுக்குச் சத்துணவுகளும் இல்லை - சுகாதாரப் பிரச்சினைகளும் ஏராளம் - அருட்தந்தை அன்ரனி
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 05 16:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 23 21:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#starvation
#tamils
#Northernprovince
#srilanka
#lka
#lastwar
#war
வவுனியா - வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கண்ணாட்டி, பரமனாலங்குளம், கணேசபுரம் ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் நூற்று எழுபத்தைந்து தமிழ்க் குடும்பங்கள் ஒருவேளை உணவிற்கு வழியின்றிப் பெரும் அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கண்ணாட்டிப் பங்குத் தந்தை அன்ரனி சோசை தெரிவித்துள்ளார். குறித்த மூன்று கிராமங்களையும் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து, தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர வருமானமின்றி ஒருவேளை உணவுக்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு உதவியளிக்குமாறு அருட்தந்தை அன்ரனி சோசை கோரிக்கை விடுத்துள்ளார்.
 
போர்க் காலத்தில் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து தற்பொழுது மீள்குடியேறிய இந்த மக்களுக்கு இலங்கை அரசாங்கம் வீடுகளை மாத்திரமே நிர்மானித்துக் கொடுத்துள்ளது. ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை. வவுனியாவில் உள்ள சிவில் அமைப்புகளும் இந்த மக்களைக் கைவிட்டுள்ளதாகவும் அருட்தந்தை அன்ரனி சோசை கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் யானை, கரடி போன்ற காட்டு விலங்குகளுடன் தினமும் போராடி வருவதுடன் காட்டு விலங்குகளால் தினமும் உயிர் அச்சுறுத்துதலுக்கும் முகம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

விவசாயத்தை மாத்திரமே அடிப்படை ஜீவானோபயமாகக் கொண்டுள்ள இந்த மக்கள் நிலக்கடலை, ஏனைய தானிய வகைகளை அவர்களது வசதிக்கேற்ப பயிரிட்டாலும் அவையனைத்தும் காட்டு விலங்குகளால் ஒரு இரவிலேயே அழிக்கப்படுகின்றன.

இந்தக் கிராமங்களில் குடிநீர் கிணறுகள் ஏனைய நீர் நிலைகள், குழாய் நீர் விநியோகங்கள் எதுவுமே இல்லாத நிலையில் குடிநீரைப் பெற்றுகொள்வதற்கே இவர்கள் பெரும் அவலத்தை எதிர்கொள்வதாகவும் அன்ரனி சோசை கூறுகின்றார்.

இந்தக் கிராமங்களில் வசிக்கும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு போதிய சத்துணவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஆரோக்கியக் குறைபாடு காணப்படுகின்றது. சுகாதாரப் பிரச்சினைகளும் உண்டு.

ஆகவே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக் கிராமங்களுக்கு வருகை தந்து இந்த மக்கள் எதிர்நோக்கும் பெரும் இடர்களை அறிந்து உதவிபுரியுமாறு அன்ரனி சோசை பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.