வடமாகாணம்

மன்னார் கரையோரப் பகுதிகள் மூலமாக போதைப்பொருட் கடத்தல்

கொழும்பு அரசியல் செல்வாக்கே காரணம் - பிரதேச மக்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 04 22:44
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 02:24
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Srilanka
#Rameswaram
#India
#lastwar
#Drugs
#slpolice
#slpoliticians
#tamils
#lka
இலங்கைக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்குதாகவும் தென்பகுதி அரசியல்வாதிகள், அமைச்சர்கள் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இந்த நிலையில் தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, சிலாவத்துறை ஆகிய கரையோரப் பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக் கரையோரங்களில் இருந்து கெரோயின், கஞ்சா, போதையூட்டப்பட்ட பாக்கு வகைகள் மன்னார் கரையோரப் பகுதிகளுக்கு படகுகள் மூலமாக தினமும் எடுத்து வரப்படுகின்றன.
 
இலங்கைக் கடற்படையினர் சிலர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனாலும் மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் சிலர் சட்டவிரோதமாக மன்னாருக்குள் கொண்டுவரப்படும் போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக மன்னார்ப் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தியாவின் கரையோரப் பகுதிகளான இராமநாதபுரம், இராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கை இந்திய போதைவஸ்து வியாபாரிகளால் இந்திய மீனவர்கள் ஒரு சிலரின் உதவியுடன் மன்னார் மாவட்ட கரையோரப் பகுதிகளுக்கு போதைப் பொருட்கள் இரவில் எடுத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போதைப் பொருட் கடத்தல் நடவடிக்கைகளில், இந்திய - இலங்கை வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும் சிலரும் ஈடுபடுவதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் செல்வாக்குகள் அதற்குக் காரணம் எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு கடத்தப்படும் போதைவஸ்துக்கள் மன்னார்க் கரையோரப் பிரதேசங்களில் உள்ள புதர் நிறைந்த பகுதிகளில் ஒரு சில நாட்களுக்கு மறைத்து வைக்கப்பட்டுப் பின்னர் பாதுகாப்பாக நகரப் பகுதிகளுக்குள் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகின்றது.

சில பெறுமதியான போதைப் பொருட்கள் கொழும்புக்கும் கடத்தப்படுவதாக மன்னார் பொலிஸார் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறியுள்ளனர்.

அதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு மீனவர்களையும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாகப் பயணித்த இந்திய இழுவைப் படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.

பின்னர் அந்தப் படகிலிருந்த இராமேஸ்வரப் பகுதிசைச் சேர்ந்த ஏழு மீனவர்களையும் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஏழு பேரும் தலைமன்னார் கடற்படை முகாமில் விசாரணை செய்யப்பட்டு மன்னார் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஞாயிறு மாலை ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து கடற்றொழில் திணைக்களத்தினர், மன்னார் மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் குறித்த ஏழு மீனவர்களையும் முன்னிலைப்படுத்தினர்.