வடக்கு- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில்

சைவ- கிறிஸ்தவ ஆலய திருவிழாக்களில் தீவிர சோதனை

நல்லூர் ஆலய வளாகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்- கண்டி எசல பெரகரா இன்று ஆரம்பம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 05 16:40
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 01:58
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Eastersundayattack
#Nallurfestival
#Jaffna
#Nallur
#slarmy
#slpolice
#tamils
#srilanka
#lka
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் வடக்குக்- கிழக்கு தாயகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினர் நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலய வளாகம் முற்று முழுதாக இராணுவம் மற்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் முதலாம் ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் இன்று திங்கட்கிழமை காலை முதல் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆலயத்திற்கு வருவோரில் சந்தேகத்திற்கு இடமானவர்களைச் சோதனை செய்தவதற்கான சோதனைக் கூடங்கள் ஆலயத்திற்கு செல்லும் நான்கு வீதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆலய சூழலில் நாற்பதுக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை மடுமாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் நடைபெற்றிருந்தது.

ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ ஆலயங்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடாத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்தே மடுமாதா ஆலயப் பெருநாளுக்கு மக்களின் வருகை குறைந்துள்ளது.

அத்துடன் பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களையும் இலங்கைப் படையினர் சோதனையிட்டிருந்தனர்.

கடந்த காலங்களில் சுமார் நான்கு இலட்சம் மக்கள் மடு தேவாலயப் பெருநாளுக்கு வருகை தந்தனர். ஆனால் இம்முறை இருபத்து நான்காயிரத்து அறுநூறு பேர் மாத்திரமே வருகை தந்ததாகவும் அந்த அருட்தந்தை கூறியிருந்தார்.

இந்த நிலையில், வருடாந்தம் இலட்சக்கணக்கான அடியார்கள் வருகைதரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு இம்முறை வருகைதரும் மக்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படலாமென நல்லூர் ஆலய குருக்கள் ஒருவர் கூர்மைச் செய்தித்தளத்திற்கு கூறினார்.

இவ்வாறனதொரு நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தமது பிரஜைகளுக்காகத் திடீரென விடுத்த பயண எச்ரிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கண்டி எசல பெரகரா (Esala Perahera) இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைச் சிங்கள பௌத்தர்களின் முதன்மை நிகழ்வாகும். அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன், தீ நடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு வகையான நடனங்களுடன் ஊர்வலம் ஆரம்பமாகியுள்ளது.

இதனை முன்னிட்டு கண்டி நகரத்தில் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து வழமையை விட இம்முறை இலங்கைப் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.