இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்

சஜித் வேட்பாளரானால் மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு!

மைத்திரி மகிந்த சந்திப்பு - ஆனால் இணக்கமில்லையெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 06 13:00
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 08 02:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#slpresidentelection
#MaithripalaS
#officialunp
#RW_UNP
#sajithpremadasa
#srilanka
#lka
இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவதென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. கட்சிகளின் மூத்த உறுப்பினர்களிடையேயும் முரண்பாடுகள், கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திங்கட்கிழமை இரவு மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து உரையாடியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய சிறிய பத்துக் கட்சிகளை உள்ளடக்கி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒப்பந்தம் செய்யவில்லை.
 
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்கி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் மைத்திரிபால சிறிசேன பேசியுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் உள்ளடக்க வேண்டுமென சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேரியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு கோரியுள்ளதாகவும் அந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவை நியமித்தால் வெற்றிவாய்ப்பு அதிகமெனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதனை ஏற்கவில்லையனெவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் யாருடன் இணைந்து செயற்படுவது என்பது குறித்து மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை முடிவு செய்யவில்லை.

மகிந்த ராஜபக்ச தரப்புடன் இணைந்து செயற்படுவது சாத்தியப்படாதென்றும் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துப் புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியோடு இரகசியப் பேச்சுக்கள் நடப்பதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களான கபீர் காசிம் சாகல ரட்ணாயக்க ஆகியோர் நேரில் சென்று சந்தித்தமை தொடர்பாக கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ள மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள், ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் சஜித் பிரேமதாசா இலங்கையின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கூறிய கருத்துக்கு ரணில் விக்கிரமசிங்க முக்கியமளிக்க வேண்டுமென அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஆனாலும் கட்சியின் மூத்த உறுப்பினரான சஜித் பிரேமதாசாவுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முரண்படும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதில் பயனில்லை என்றும் அவர்கள் எடுத்துக் கூறியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.