வடமாகாணத்தின் கிளிநொச்சி

பூநகரி - கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகழ்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு

பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 07 17:39
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 08 02:38
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#poonakary
#slpolice
#tamils
#srilanka
#lka
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரைத் தொடர்ந்து தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட தமிழர் தாயகத்தில் உள்ள வளங்கள் திட்டமிட்ட முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூறையாடப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் மணல் அகழ்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை செப்டெம்பர் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கௌதாரிமுனையில் உள்ள இயற்கை வளமான மணல் தொடர்ந்தும் சட்டவிரோதமாக அகழப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தி கடந்த யூலை 22 ஆம் திகதி பிரதேச மக்கள் தாக்கல் செய்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.

சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி தமது பிரதேசத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு வலியுறுத்தி கடந்த யூலை மாதம் பூநகரி காவல் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பூநகரிப் பொலிசார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை வரை அகழ்விற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே குறித்த வழக்கு நேற்று நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக இளம் சட்டத்தரணிகளான சுப்பிரமணியம் சிவசூரியா, சரண்யா தாசுதன், நவரத்தினம் பிருந்தா, கோகுலதீபன் தர்சா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் எடுத்த நீதிமன்றம், பூநகரி - கௌதாரி முனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடையை எதிர்வரும் செப்டெம்பர் எட்டாம் திகதி வரை மேலும் நீடித்துள்ளதாக கிளிநொச்சி செய்தியாளர் கூர்மை செய்தித்தளத்திற்கு குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

தமிழ்ப் பிரதிநிதிகள் இலங்கை நாடாளுமன்றத்திலும் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனாலும் தமிழர் தாயகத்தில் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.