வடமாகாணம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் பேரணி

தமிழ்க் கட்சிகள் மீது நம்பிக்கையிழப்பு - தொடர் போராட்டத்திற்கு ஆயத்தம்

சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 07 18:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 18:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#relationsofmissingpersons
#ompsl
#tamils
#vavuniya
#srilanka
#lka
வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி வவுனியாவில் தொளாயிரம் நாட்களாகச் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் பேராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இலங்கை அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில். தமது போராட்டத்திற்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாகப் போராட்டம் இடம்பெற்றது. கண்டிவீதி வழியாக பேரணியாகச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் நடத்தப்படும் இடத்தைச் சென்றடைந்தனர்.
 
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக வந்துவிட வேண்டும் என்பதில் மாத்திரமே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் செயற்படுகின்றனர். போரின் பக்க விளைவுகளுக்குக் கூடத் தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசத்தை நோக்கி அழுத்தம் கொடுக்கவில்லை.

1976 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், அன்றில் இருந்து இன்று வரை சிங்கள ஆட்சியாளர்களை நம்பி, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஏமாந்து வருவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். போரை இல்லாதொழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவியளித்த அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், தற்போது ஈழத் தமிழர் விவகாரத்தில் அமைதியாகவுள்ளன.

தமிழ் அரசியல் கட்சிகளை நம்புவதைவிட தொடர்ச்சியாகப் போராடி சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர்.