இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நகர்வுகள் - அமெரிக்காவின் இரட்டை முகம்

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென மைத்திரியிடம் சஜித் வேண்டுதல்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 13 15:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 13 22:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#president
#election
#UNP
#GotabayaRajapaksa
இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.
 
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென கையெழுத்துப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுமென கட்சியின் பதுளைத் தொகுதி அமைப்பாளர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான ஆதரவை வழங்குவது குறித்து அமெரிக்கத் தூதரகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில், அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக மங்கள சமரவீரவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளரென அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு விரைவில் முடிவெடுக்குமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளரென ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. பகிரங்கமாகவே எதிர்க்க ஆரம்பித்தனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஆதரவான உறுப்பினர்களோடு சஜித் பிரேமதாச வெளியே வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துப் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்க விருப்பம் கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே சஜித் பிரேமதாசவுடன் பேசியிருந்தார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக வருமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டுமெனக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. இதனால் சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக நியமிக்கும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன தீவிரமாகச் செயற்படுவதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல்த் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா, வடக்குக் - கிழக்குத் தாயகக் கடற்பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனாலேயே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளது

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க விருப்பமில்லாத குமார் வெல்கம போன்ற உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் உள்ளனர். அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவோடு பேசியதாகக் கூறப்படுகின்றது.

ஆனாலும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதனை மைத்திரிபால சிறிசேன ஆதரிப்பாரா இல்லையா என்பது குறித்து முடிவுகள் இல்லை.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை வேட்பாளராக அறிவித்தால் அதனை ஏற்று ஆதரவு வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுள்ளாரென்றும் மற்றுமொரு உயர்மட்டத் தகவல் கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைய முடியும் எனவும் சஜித் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முடியுமென அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோடும் சென்ற ஞாயிற்றுக்கிழமை மங்கள சமரவீர பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனும் மங்கள சமரவீர இது பற்றி உரையாடியுமுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முயற்சி எடுத்திருந்தது. ஆனால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்தவொரு சந்திப்பையும் இதுவரை நடத்தவில்லை.

எனினும் கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ளக எதிர்ப்புகள் கடுமையாக நிலவியதால் கரு ஜயசூரியவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்கத் தூதுவர் பேசியிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடிக்குமானால் சில சமயங்களில் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக அறிவிக்கும் நிலையும் ஏற்படலாம். இது குறித்தும் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கண்டி பௌத்த மகாநாயக்கத் தேரர்களின் அரசியல்ச் செல்வாக்கு இலங்கையில் அதிகளவு உள்ளதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா, பௌத்த தேரர்களின் விருப்பத்திற்குரிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றது.

அதனடிப்படையிலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கரு ஜயசூரியவை ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார். இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்புகளும் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்தும் பரிசீலிக்க அமெரிக்கத் தூதரகம் தயாராகியுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடிக்குமானால் சில சமயங்களில் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக அறிவிக்கும் நிலையும் ஏற்படலாம். இது குறித்தும் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமெரிக்காவின் ஆதரவுடன் அமைப்பதில் அமைச்சர் மங்கள சமரவீர தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பகுதி உள்ளிட்ட கிழக்குக் கடற்பிரதேசங்களையும் திருகோணமலைத் துறைமுகத்தையும் கையகப்படுத்தும் நோக்கில் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு அமெரிக்கா கடந்த சில வருடங்களாக முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா தற்போது வடக்குக் - கிழக்குக் கடற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணத்தினாலேயே இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர் தெரிவு விடயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.