இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் சிவில் அமைப்புகளின் பொறுப்பு என்ன?

போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியது ரணில் அரசாங்கம் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 16 15:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 14:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Sumanthiran
#TNA
#tamils
#PresPollSL
#srilanka
#lka
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரைத் தெரிவு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் வடக்கு - கிழக்குத் தாயகப் பிரதேசங்களுக்குச் செல்லும் சிங்கள ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பல்வேறு உறுதிமொழிகளை வழங்குகின்றனர். இலங்கையின் புதிய அரசியல் யாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள நகல் வரைபில் கூறப்பட்டுள்ளதையே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை கூறியுள்ளார்.
 
தங்களுடைய ஆட்சியில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படுமென கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கம் எதையுமே செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் கையாண்ட இராஜதந்திரம் தோல்வி என்றும் அவர் கூறுகின்றார். இதனால் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஏமாற்றிய விடயங்களை எடுத்துக் கூற வேண்டுமெனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கும் வாக்களிக்க முடியாதென்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்கலைக்கழகக் கல்வியாளர்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் இணைந்து கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டுமெனவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் மனித உரிமை மீறல் போன்ற குற்றவியல் குற்றங்களில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கைப் படைத் தளபதிகளைக் காப்பாற்றியது மைத்திரி - ரணில் அரசாங்கமே என்றும் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்.

அதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் கூறுகின்ற வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லையென சம்பந்தன் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரிடம் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் மட்டக்களப்பில் மக்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.