இலங்கையின் தென்பகுதியி்ல் உள்ள

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பார்வையிட்ட சர்வதேசம்

சீன இராணுவ முகாம் அமையாதென்கிறார் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 16 22:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 17 15:25
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Hambantota
#Port
#US
#India
#Colombo
#meeting
இலங்கையின் தென்பகுதித் துறை முகத்தின் நுழைவாசலாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமையுமென அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உயர்மட்ட வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் அம்பாந்தோட்டைக்குச் சென்று சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்குரிய சாதகமான நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும திஸ்ஸ விக்ரமசிங்க கூறியுள்ளார். இலங்கைத் துறை முகங்களை மையப்படுத்திய சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாடு ஒன்று கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்றது.
 
அங்கு பிரதான உரையாற்றிய திஸ்ஸ விக்ரமசிங்க, அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீன அரசினால் அடிப்படையில் இருந்து சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இவ்வாறு சீன அரசு அபிவிருத்தி செய்தமையினால் அம்பாந்தோட்டையில் சீன இராணுவம் தளம் ஒன்றை அமைக்குமெனக் கூறப்பட்டிருந்தது. மேற்குலக நாடுகளும் அவ்வாறு சந்தேகம் வெளியிட்டிருந்தன.

ஆனாலும் தற்போது சீனத் துறைமுகத்திற்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்வதாக திஸ்ஸ விக்ரமசிங்க கூறினார். கடல்சார்ந்த வர்த்தகச் செயற்பாட்டில் கேந்திர அமைவிடமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க, ஜப்பான், இந்திய உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வர்த்தகப் பிரதிநிதிகள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

அதேவேளை, இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜப்பான் எழுப்பிய பல கேள்விகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் விளக்கமளித்திருந்தது.

குறிப்பாக சீன அரசின் இராணுவ மூலோபாயங்களுக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லையென ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கொழும்பில், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

ஆனால் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் ரூவான் விஜேரட்ன, இட்சுனோரி ஒனோடெரா கூறியதை மறுத்துள்ளார். அதாவது சீனாவின் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என உறுதியளித்திருந்தார்.

இதனையடுத்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதாவது அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளின் பாவனைக்கும் அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டிருந்தார்.

அதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கம் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புச் செயற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவது குறித்தும் ரணில் விக்ரமசிங்க இணங்கியிருந்தார்.