இலங்கையில் கடும் வரட்சி

இரணைமடுக் குளத்தில் நீர் வற்றியதால் கிளிநொச்சியில் குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தகவல்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 18 20:55
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 19 02:37
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#IranamaduTank
#Rought
#Kilinochchi
#tamils
#srilanka
#lka
நாட்டில் கடும் வரட்சி நிலவிவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பொறியியலாளர் என்.நவரூபன் தெரிவித்தார். இரணைமடுக் குளத்தில் இருந்து இடதுகரை வாய்க்கால் மூலம் கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து எடுக்கப்படுகின்ற நீர் சுத்திகரிக்கப்பட்டு, பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகமும், பல கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள் மூலமும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
ஆனால், தற்போது இரணைமடுக் குளத்தில் நீர் மட்டம் ஒன்பது அடிக்குக் கீழ் காணப்படுவதனால், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் வழங்கப்படுகின்ற குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, இதனைக் கருத்திற்கொண்டு தற்போது இரண்டு நாளைக்கு ஒரு தடவை நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த வரட்சியான நிலை நீடித்தால் அது மூன்று நாளைக்கு ஒரு தடவையாக மாற்றப்படும் எனவும் பொறியியலாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

எழுநூறு மீற்றர் கியூப் நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் அரைவாசி அதாவது 350 மீற்றர் கியூப் நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் கடும் வரட்சி காரணமாக அனைத்துப் பகுதிகளிலும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.