இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

ஒற்றையாட்சியை நியாயப்படுத்தும் மற்றுமொரு வேட்பாளர் அறிவிப்பு - ஜே.வி.பி கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளைச் சாடினார் அனுரகுமார திஸாநாயக்க
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 18 22:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 19 10:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#JVP
#AnuraKumaraDissanayaka
#PresPollSL
#colombo
#srilanka
#lka
#tamils
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தமக்குச் சார்பான சிறிய கட்சிகள், அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடவுள்ளது. அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாக்சிய சிந்தனையுடைய அல்லது இடதுசாரிப் பண்புள்ள கட்சியாக ஜே.வி.பி தம்மை முன்னிலைப்படுத்தினாலும், சிங்கள பௌத்த தேசியவாதக் கண்ணோட்டத்துடனேயே அவர்களின் அரசியல் செயற்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு மாற்றீடான பலமான சக்தியாக ஜே.வி.பி தம்மை அடையாளப்படுத்தியுள்ளது.
 
கொழும்பு காலிமுகத்திடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலான ஜே.வி.பியின் கூட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு எதிராகக் கோசம் எழுப்பினர்.

பெருந்திரளான பௌத்த பிக்குமார் முன்னிலையிலும் மக்கள் மத்தியிலும் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்கா, இலங்கைத் தேசியத்தைக் காப்பாற்ற ஒன்று சேருமாறு சிங்கள மக்களுக்கு அழைப்பு விடுத்தார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்த ராஜபக்ச, மற்றும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீது காரசாரமான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்தார்.

சிங்கள பௌத்த தேசியவாதத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்ற தொனியில் அனுரகுமார திஸாநாயக்காவின் உரை அமைந்திருந்ததாக கொழும்பில் உள்ள தமிழ்ச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறினார்.

இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நிர்வாக ரீதியான அதிகாரங்களை மாத்திரமே பகிர வேண்டும் என்பது ஜே.வி.பியின் அடிப்படை நிலைப்பாடு.

இலங்கையின் ஒற்றையாட்சியும் இறைமையும் ஒருபோதும் பிரிபடக் கூடாதென அனுரகுமார திஸாநாயக்க இந்த ஆண்டு முற்பகுதியில் இடம்பெற்ற புதிய அரசியல் யாப்புத் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சி கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வேட்பாளர் யாரென்று அறிவிக்கவில்லை.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாரை ஆதரிப்பது அல்லது பொது வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதா என்பது குறித்தும் இதுவரை தீர்மானிக்கவில்லை.

இந்த நிலையில் ஜே.வி.பி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் மக்களை ஒன்று திரட்டி வேட்பாளரை அறிவித்துள்ளது. ஆனால் ஈழத் தமிழ் மக்கள் விவகாரத்தில் பிரதான சிங்கள கட்சிகளின் நிலைப்பாட்டையே ஜே.வி.பியும் உள்வாங்கியுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 2006 ஆம் ஆண்டு வடக்குக் - கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இலங்கை உயர் நீதிமன்றத்தினால் பிரிக்கப்படுவதற்கு ஜே.வி.பியே காரணமாகும்.

2006 ஆம் ஆண்டு நோ்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சும் முறிக்கப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் மீது போர் திணிக்கப்பட்டமைக்கும் ஜே.வி.பியே மகிந்த ராஜபக்சவுக்குப் பிரதான பின்னணியாக இருந்தது.

ஐம்பத்தியொரு வயதான அனுரகுமார திஸாநாயக்கா 1997 ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அதே ஆண்டில் ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருந்தார்.

1998 ஆம் ஆண்டு மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட்டிருந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவானார்.

2004 ஆம் ஆண்டு குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

சந்திரிக்கா தலைமையிலான பொதுஜன மக்கள் முன்னணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சராகப் பதவி வகித்து சீனாவுக்குப் பல தடவை பயணம் செய்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் தேசிய பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி நாடாளுமன்றக் குழுவுக்கும் தலைவராகப் பதவி வகித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ஜே.வி.பியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2015 ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கம் உருவாக்கப்படுவதில் அனுரகுமார திஸாநாயக்க முக்கிய பங்காற்றியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவு விருப்பு வாக்குகளினால் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க என்ற முழுப் பெயரைக் கொண்ட இவர் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 1968 ஆம் ஆண்டு மாத்தளை கலேவெலப் பிரதேசத்தில் பிறந்தார்.